மாணவர்களின் கல்வி நலனை பாதுகாப்பதற்காகவே எமிஸ் இணையதளப் பதிவுகளில் இருந்து எங்களை விடுவித்து கொண்டுள்ளோம்!..
AIFETO..18.11.2023
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதிப்படிதான் இணையதளப் பணிகளில் இருந்து நாங்கள் எங்களை விடுவித்துக் கொண்டுள்ளோம்!.. தேசியக் கல்விக் கொள்கையில் கூட இல்லாத கொடுமை!.. வாரம் தோறும் 15 நாட்களுக்கு ஒரு முறை பள்ளி சிறார்களுக்கு தேர்வு வைப்பதும்... மதிப்பீடு செய்வதும் எந்த மாநிலத்திலும் இல்லாத கொடுமை!..
அச்சுறுத்தும்அலுவலர்கள் இருப்பார்களேயானால் முறைப்படி அவர்களின் செயல்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்!..
தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.
டிட்டோஜாக் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி அறைகூவலினை ஏற்று எமிஸ் இணையதள பதிவுகளில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவினை தவிர்த்து அனைத்து பதிவுகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டுள்ள.... வட்டாரக் கிளைகளை, மாவட்ட அமைப்பினை எடுத்த முடிவில் உறுதியாக நின்றார்கள் என்ற பெருமையுடன் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!..
அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் மாநில அளவில் தகவல் கேட்டறிந்து கொண்டதில் சில மாவட்டங்கள் 70% சதவீதத்திற்கும் குறையாமல் இணையதள பதிவுகளில் இருந்து விடுவித்துக் கொண்டுள்ளார்கள். சில ஒன்றியங்கள் முழுவதும் விடுவித்துக் கொண்டு மானம் காத்த இயக்க செயல் வீரர்களாக தலைநிமிர்ந்து நிற்பதை கண்டு இதயம் மகிழ்ந்து பாராட்டுகிறோம்!. விரல் விடக்கூடிய சில ஒன்றிய மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் உள்ள மாவட்டங்கள் வட்டாரக் கிளைகளில் ஏனோதானோவென்று ஒதுங்கி இருந்ததால் ஆசிரியர்கள் தன்னையும் அறியாமல் பதிவு செய்து வருகிறார்கள் என்ற செய்தியை உணர முடிகிறது.
தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு குடும்பத்தில் சகோதரிகள் பெரும்பான்மையானோர் EMISஇணையதள அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் மரணமடைந்த சகோதரி தொடங்கி, பலர் வெளியே தெரியாத மாரடைப்பு மரணங்கள் நடந்துள்ளது. பல ஆசிரியர்கள் விருப்ப ஓய்வில் சென்று கொண்டுள்ளார்கள். ஆண் ஆசிரியர்கள் பலர் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருவதையும், எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களின் கல்வி நலன் அன்றாடம் பாதிக்கப்பட்டு வருவதையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கற்பித்தல் பணியாற்ற ஆசிரியர்களால் நேரம் ஒதுக்க முடியவில்லை இந்த நிலைமையில் டிட்டோஜாக் போராட்டம் அறிவித்தார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நவம்பர் 1 ஆம் தேதி முதல் எமிஸ் இணையதள பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள்!.. என்று உறுதி அளித்தார்கள். பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் முனைவர் க. அறிவொளி அவர்கள் அக்டோபர் 25 முதல் இணையதள பதிவு செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் உறுதிமொழியினை ஏற்று தான் நாம் நவம்பர் 1ஆம் தேதி முதல் வருகை பதிவினை தவிர ஏனைய பதிவுகளை EMIS இணையதளத்தில் மேற்கொள்வதில்லை என்று முடிவெடுத்து கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும்! இன்று முதல் இணையதளத்தில் வருகைப் பதிவை தவிர வேறு பதிவுகள் செய்வதில்லை என்பதில் உறுதி எடுத்து நிறுத்தி விடுவோம். நமக்கு காலக்கெடு (Deadline) விதிப்பதற்கு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை. அவரவர் பணியினை அவரவர் சரியாக செய்தால் போதும்!.. நமக்குள்ள பணி கற்பித்தல் பணிதான்.
We reject NEP-2020
ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு வாரம் தோறும் அசெஸ்மென்ட் தேவையா?... இப்போது 15 நாட்களுக்கு ஒரு முறை அசெஸ்மெண்ட் தேவையா?.. எந்த மாநிலத்திலும் இல்லாத மாணவர்களுக்கு இழைக்கப்படுகின்ற காலக் கொடுமையாகும். நாங்கள் பாடத்தை நடத்துகிறோம்!.. வந்து பார்த்துக் கொள்ளுங்கள்!..
எந்த கம்பெனியின் இணையதளத்திற்கோ?.. நிதி ஒதுக்கீட்டை செய்து, அந்த கம்பெனி சொல்கின்ற அத்தனை இணையதள பதிவுகளையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் பணப் பலன்களை பெறுவதற்காக கல்வி நலனை பாழ்படுத்த வேண்டாம்.
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் சத்துணவு திட்டத்தினை தொடங்கியபோது தலைமை ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்தார்கள். தலைமையாசிரியர்கள் கற்பித்தல் பணி பாதிக்கப்படும் அதனால் சத்துணவு பொறுப்பினை ஏற்று நடத்த இயலாது என்பதை சங்கங்கள் வாரியாக தெரியப்படுத்தினோம். அதிகாரிகள் தலைமை ஆசிரியர்கள் தான் சத்துணவு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று கெடுபிடியுடன் அரசாணைகளை வெளியிட்டார்கள். சங்கங்கள் சத்துணவு பொறுப்பில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்கிறோம் என்று அறிவித்து வெளியே வந்தோம்.
மாண்புமிகு முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் சில மாவட்டங்களை தேர்வு செய்து பள்ளிகளை பார்வையிட்டார்கள். தலைமையாசிரியர்கள் சத்துணவு பொறுப்பினை ஏற்று நடத்தவில்லை... அதை நேரில் கண்டார்கள். அதன் பிறகு தான் சத்துணவு வழங்குவதற்கு தனியாக சத்துணவு அமைப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்தார்கள்.
தலைவர் கலைஞர் காலத்தில் ஆசிரியர்களுக்கு அளித்த கற்பித்தல் சுதந்திர உணர்வினை.... அவரது பிள்ளை காலத்தில் பாதிப்புக்கு ஆளாக்க வேண்டாம் என பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்பின்படி இணையதள பதிவு செய்யும் பணிகளில் இருந்து முற்றிலும் எங்களை விடுவித்துக் கொள்கிறோம். ஆட்சிக்கோ?.. பள்ளிக் கல்வித்துறைக்கோ?.. எதிரான போராட்டம் அல்ல; எங்கள் போராட்டம் கற்பித்தல் பணியில் மட்டும் எங்களை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வதற்காக எமிஸ் (EMIS) இணையதள பதிவுகளில் இருந்து முழுவதும் விடுவித்துக் கொள்கிறோம்.
இனி எவராவது காலக்கெடு (Deadline) விதித்து எச்சரிக்கை செய்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்... மாணவர்களின் கல்வி நலனை மனதில் கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபடுவோம்!. எப்படிப்பட்ட நடவடிக்கை வந்தாலும், நடவடிக்கை எடுப்பவர்களைப் பற்றிய உள்ளும் புறமும் ஆய்வினை பட்டியல் போட்டு வெளியிட தயாராக உள்ளோம்!...
இணையதள பதிவுகள் செய்யவில்லை என்பதற்காக எவரேனும் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களேயானால் நடைபெறும் வீரம் செறிந்த ஜேக்டோஜியோ போராட்டத்திற்கு வலுவினை சேர்க்கட்டும்!... வலுவினை சேர்க்கட்டும்!...
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.
No comments:
Post a Comment