2023ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு(TNPSC Group 4 Exam 2023) எப்போது நடைபெறும், காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்ற அறிவிப்பு, இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம்.
2022 தேர்வு
இதற்கிடையே 2022ஆம் ஆண்டு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தாமதமானது. 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 8 மாதங்கள் கழித்து மார்ச் 24ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,205 ஆக உயர்த்தப்பட்டததொடர்ந்து கலந்தாய்வு தாமதமாக நடைபெற்ற நிலையில், அண்மையில் முதலமைச்சரால் குரூப் 4 பணியில் தேர்வு பெற்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக 5278 இளநிலை உதவியாளர்கள், 3399 தட்டச்சர்கள், 1,077 சுருக்கெழுத்தர்கள், 425 கிராம நிர்வாக அலுவலர்கள், 67 வரி தண்டலர்கள் மற்றும் 19 கள உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

2023 தேர்வுகள் எப்போது?
கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான உத்தேச அட்டவணையில், நவம்பர் 2023-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு (TNPSC Group 4 Exam Notification 2023) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படாத நிலையில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மே மாதம் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் 2024 ஜூலை மாதத்தில் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதேபோல 2023ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட, புதிய உத்தேச அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதில், நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படாத நிலையில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற உள்ளது. மே மாதம் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ் தேர்வுகள் குறித்த அட்டவணையைக் காண: https://www.tnpsc.gov.in/static_pdf/annualplanner/ARP_2023_ENG_UPDATED.pdf
இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது நடைபெறும்? காலிப் பணியிடங்கள் எவ்வளவு? என்ற அறிவிப்பு இந்த மாதத்திலேயே இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment