Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 19, 2023

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 - மீனம்

வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் டிசம்பர் 20 - ம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 20.12.23 முதல் 6.3.26 வரை கும்பராசியில் சஞ்சரிக்கும் சனிபகவானால் மீன ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் உண்டாகும் என்பதைக் காண்போம்.

எல்லோரையும் எளிதில் நம்பிச் செயல்படும் தன்மை கொண்ட மீன ராசி அன்பர்களே...

இதுவரை உங்கள் ராசிக்கு 11 - ம் வீட்டில் அமர்ந்து பலவித நன்மைகளைக் கொடுத்துக் கொண்டிருந்த சனிபகவான் தற்போது 12 - ம் இடமான விரைய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். ஏழரைச் சனி வரும் டிசம்பர் 20 முதல் ஆரம்பமாகிறது. அடடா, ஏழரைச் சனி இனி என்ன ஆகுமோ என்ற கவலையை முதலில் விட்டுவிடுங்கள்.

ஏழரைச்சனியாக இருந்தாலும் சனிபகவான் மீனராசிக்கு நல்ல பலன்களையே தருவார். ராசிக்கு 12 -ம் இடம் என்பது மறைவு ஸ்தானம். அதில் சனி பகவான் மறைவது நன்மையையே கொடுக்கும். இதனால் தடைப்பட்டு பல முக்கியமான காரியங்கள் இனிதே நிறைவேறும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பல பிரச்னைகளைப் பேசியே தீர்த்துவிடுவீர்கள். குடும்பத்துக்குள் . கணவன் -மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் தீரும். மனம் விட்டுப் பேசி பிரச்னைகளைச் சரி செய்வீர்கள்.

மீனம்

திருமணம், சீமந்தம், காதுகுத்தி போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். குருபகவானை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு சனிபகவான் மிக நல்ல பலன்களையே கொடுப்பார். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். அவற்றை சுபச் செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். மகன் அல்லது மகளின் கல்வி, திருமணம் ஆகியவற்றுக்குச் செலவு செய்யுங்கள். ஆதரவின்றி இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு உதவுங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் 2, 6, 9 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும். சனிபகவான் உங்களின் 2-ம் வீடான தன குடும்ப லாபஸ்தானத்தைப் பார்ப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். சிலர் கடன் வாங்கவும் நேரும். கொடுத்த வாக்கை காப்பற்றச் சிறிது போராட வேண்டியது இருக்கும்.வாக்குஸ்தானத்தை சனி பார்ப்பதால் பேச்சால் பிரச்னை வரலாம்.

சனிபகவான் 6-ம் வீடான கடன், சத்ரு ஸ்தானத்தைப் பார்ப்பதால் வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மூத்த சகோதரர்கள் தேடிவந்து உதவிகள் செய்வார்கள். தாய்வழியில் சொத்து வந்து சேரும். நட்பு வட்டம் விரியும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தடைப்பட்ட குலதெய்வ பிராத்தனையைத் தொடர்வீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். பால்ய நண்பர்களானாலும், பழைய சொந்தங்கள் ஆனாலும் அத்துமீறிப் பழகவோ, குடும்ப ரகசியங்களை சொல்லி ஆறுதல் அடையவோ வேண்டாம்.

சனிபகவான் உங்களின் 9 -ம் வீடான லாபஸ்தானத்தைப் பார்ப்பதால் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முடிந்த அளவு அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள்.

வியாபாரம்: முதலீடுகளில் கவனம் தேவை. அனுபவம் இல்லாத தொழிலில் கால் வைக்க வேண்டாம். புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். போட்டியாளர்களே வியக்கும் அளவுக்கு லாபம் அதிகரிக்கும். நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். என்றாலும் யாரையும் நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் கொஞ்சம் இழுபறியாகத்தான் இருக்கும். கறாராகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும்.



உத்தியோகம்: பணியிடத்தில் கம்பீரமாக இருப்பீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிப் போவார்கள். வெற்றிகள் குவியும். மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணிச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். என்றாலும் வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு வேண்டாமே... தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பதவியுயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவார்கள்.
எந்திர சனீஸ்வரர்

மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடனும் பணிச்சுமையுடனும் நல்ல ஆதாயத்தைப் பெற வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: ஆரணி - படவேடு தடத்தில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீஎந்திர சனீஸ்வர பகவானை மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விதவைப் பெண்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

No comments:

Post a Comment