Sunday, December 31, 2023

புத்தாண்டு பலன்கள் 2024 - தனுசு ராசியினருக்கு எப்படி?

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) தன்னுடைய சொந்த காலில் நின்று சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே... நீங்கள் பிறரிடம் கைகட்டி சேவை செய்ய விரும்பாதவர்கள். மனதிற்குள் எவ்வளவு சோகம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். நேர்மையை கடைபிடித்து நடப்பதால் கம்பீரமாக பீடு நடை போடுவீர்கள். பிறர் உங்களுக்கு தீமை செய்தாலும் அவர்களுக்கு நீங்கள் எப்போதும் நன்மையே செய்வீர்கள். அவசரத்தில் உணர்ச்சிகளை மட்டும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். செய்யும் காரியங்களில் சிறிது அக்கறை மட்டும் எடுத்தால் வெற்றி உங்களைத் தேடி வரும். இந்த ஆண்டில் முக்கிய திருப்பங்களைக் காணப் போகிறீர்கள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தாய் வழி ஆதரவு பெருகும். இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வம்பு வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். திடீரென்று வெளிநாடுகளுக்குப் பயணப்பட விசா கிடைக்கும். இதன் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.]

பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கூடும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டினால் குதூகலங்கள் அதிகம் சந்திப்பீர்கள். பாசம் காட்டாத உற்றார் உறவினர்கள் பாசம் காட்டத் துவங்குவார்கள். உடலில் இருந்த உபாதைகளும், மனக்குழப்பங்களும் விலகும். புதியவர்கள் நட்பு கிடைத்து அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களின் நம்பிக்கைகள் வீண் போகாது. சொத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடியும். புதிய கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் தேடிவரும். அதேநேரம் திரும்பத் திரும்பச் செலவு வைக்கும் வாகனங்களை மாற்றி விடவும். மறைமுகப் பகையை பாராட்டும் பழைய நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு: சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். உங்கள் பணிகளில் அதிக சிரத்தையும் முயற்சியும் தேவை. யாரும் உங்களை குறை கூறாத அளவிற்கு நேரத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் உங்களிடம் கனிவான உறவினை கொள்ளும். அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை நிமித்தமாக வெளியூர் பிரயாணங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

வியாபாரிகளுக்கு: குறைந்தபட்சம் லாபம் உறுதியாகக் கிடைக்கும். போட்டிகள் அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் ஆதரவால் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். உங்கள் பணியாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது நன்மை தரும். யாரிடமும் அனுசரணையான உறவைக் கையாள்வது நல்லது. கூட்டு வியாபாரங்களில் கணக்கினை சரியாக வைத்துக் கொள்வது நன்மை தரும். அரசு வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.

கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் கொட்டும். அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சக கலைஞ்சர்களிடம் சுமூகமாக பழகுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரியாக படித்து பார்ப்பது நல்லது. வெளியூர் பயணம் செல்லும் சரியான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு: ஏழரை ஜென்ம சனி ஆரம்பிக்க இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறையலாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. விளையாட்டில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நன்மை தரும். உயர் கல்விக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் வரலாம்.

அரசியல்துறையினருக்கு: எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மேலும் அதிகாரம் மிக்க பதவிகளும் உங்களைத் தேடி வரும். வெற்றி தரும்படியான பயணங்களை மேற்கொள்வர். தொண்டர்களும் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வர்.

பெண்மணிகளுக்கு: அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புதிய ஆலயங்களுக்கு சென்று வருவர். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லைகள் ஏற்படாது. கடினமாக உழைத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோரின் உதவிகளால் முன்னேறுவீர்கள்.

நட்சத்திர பலன்கள் 

மூலம்: இந்த ஆண்டு முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத்தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள்.

பூராடம்: இந்த ஆண்டு கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.

உத்திராடம்: இந்த ஆண்டு பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அநாவசியப் பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.

பரிகாரம்: ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 5 ஒரு முக மண் அகல் விளக்கு நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை கலந்து ஏற்றவும் 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன் | + அதிகமாக உழைத்தல் | - பரபரப்பு மற்றும் உடல்நலம் பாதித்தல்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News