ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்) கவர்ச்சிகாரகன் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே... எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு வட்டம் இருந்து கொண்டேயிருக்குமென்னும் அளவுக்கு உறவினர்களை விட நண்பர்கள் வட்டம் உங்களுக்குப் பெரிதாயிருக்கும். எல்லாரையும் பற்றிய விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவருக்கும் நீங்கள், அவர்களின் குணாதிசயங்களையும் நன்றாக உணர்ந்தவர்களாகவே இருப்பீர்கள். எனவே உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் தான் ஏமாறுவார்களேயன்றி, நீங்கள் எதிலும் ஏமாற மாட்டீர்கள். உங்கள் உள்ளத்தைப் போலவே உடைகளும் தூய்மையாகவே இருக்க வேண்டுமென விரும்புபவர் நீங்கள்.
இந்த ஆண்டு சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும். உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று உங்களது செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்யமும் சிறப்பாகவே தொடரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். இரண்டுபட்டிருந்த குடும்பம் ஒன்று சேரும். குடும்பச் சூழலில் இன்பகரமான மாற்றங்களைக் காண்பீர்கள். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியமும் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உங்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்றவற்றை எளிதாகப் பெற்று மகிழ்வீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெற்று மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறைமுக வருமானங்களின் காரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும் என்பதுடன் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கும் நாளும் உயர்ந்து வரும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நீண்டகாலம் திட்டமிட்டு வந்தவர்களின் திட்டம் செயல்வடிவம் பெறும். இதுவரை வேலை தேடி அலைந்தவர்கள் இப்போது ஒரு நல்ல வேலை கிடைக்கப் பெறுவீர்கள். கவுரவப் பதவிகளைப் பெறக்கூடிய நிலை சிலருக்கு உண்டு.
வியாபாரிகளுக்கு: முழு மனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். இருப்பினும் வியாபார ஸ்தலத்தில் உங்கள் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடிமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும். இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பிவிட இடமுண்டு. எனவே தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நீங்கள் முழுக்கவனத்தையும் செலுத்துவது அவசியம். வாடிக்கையாளர்களிடம் கடன் பாக்கிகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். இல்லையெனில் வசூல் செய்வது கடினம். சிலர் வணிக சங்கங்களில் பொறுப்பான பதவியை ஏற்க நேரும்.
கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் என்பதால் நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்ககூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் புகழும் பொருளாதார அந்தஸ்தும் உயரக்கூடிய வாய்ப்புண்டு. எல்லோரிடமும் அனுசரணையாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்வதன் மூலம் உங்களுக்குரிய வாய்ப்புகளில் சில, பிற கலைஞர்களுக்குக் கை நழுவிப் போகாமல் காத்துகொள்ள முடியும் என்பது உங்கள் கவனத்தில் இருந்து வருவது அவசியம்.
மாணவர்களுக்கு: படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற துறைகளிலும் நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறக்கூடிய நிலை உண்டு. அரசு வழங்கும் கல்விச் சலுகைகள் போன்றவற்றைப் பெற்று மகிழ்வீர்கள். நீங்கள் பிற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றாலும் இப்போதைக்கு படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு: உங்கள் தன்னலமற்ற உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். உங்கள் மனஉறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். இதன் காரணமாக உங்கள் பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதிப்பார்கள் என்பதால் நாளுக்கு நாள் உங்கள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். உங்கள் மன உறுதியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.
பெண்களுக்கு: வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும். திருமணம் தள்ளிப்போய் வந்த சிலருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும். சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் போன்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி சிறு சச்சரவுகளைச் சமாளித்து அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறைமுகச் சேமிப்புகள் மனநிறைவு தரும்.
நட்சத்திர பலன்கள்
கிருத்திகை 2,3,4 பாதங்கள்: இந்த ஆண்டில் புதிய சொத்துகள் அமையும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தினரின் தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி அவர்களைத் திருப்திபடுத்துவீர்கள். நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். மகன் அல்லது மகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையக்கூடும். கோபத்தைக் கட்டுபடுத்துவதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது நிதானமாக இருந்து வருவதும் அவசியம். பொதுவாக உடல் நலத்தில் ஓரளவு அக்கறை செலுத்தி வருவது நல்லது. புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நன்மை தரும்.
ரோகிணி: இந்த ஆண்டில் எதிலும் நிதானமாகச் செயல்படுவதன் மூலம் தாமதமின்றி முழுமையான வெற்றியைப் பெற முடியும். குழப்பத்துக்கு இடம் கொடுக்காதீர்கள். அரசு வழியில் சிலர் நன்மைகளைப் பெற்று மகிழ வாய்ப்பு உண்டு. மனைவியின் பெயரில் அசையாச் சொத்துகளைச் சிலர் வாங்க முற்படுவீர்களாயினும் ஆவணங்களைச் சரியாகப் பரிசோதனைச் செய்து, வாஸ்து நிபுணர் ஒருவரின் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர் வாங்குவது நன்மை தரும். பிற்காலத்தில் தொல்லை நேராமல் தவிர்க்கலாம். பொருளாதார நிலையில் திருப்திகரமான போக்கு தென்படும்.
மிருகசீரிஷம் 1,2 பாதங்கள்: இந்த ஆண்டு சகோதர வழியில் செலவு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய சந்தர்ப்பம் கைகூடி வரும். இதற்கு உறவினர்களின் ஒத்துழைப்பு பெரிதும் உதவக்கூடும். நண்பர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையிலேயே இருந்து வரும். கடிதத் தொடர்புகளால் களிப்பு தரும் செய்திகளைக் கேட்க வாய்ப்பு உண்டு. பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழக்கூடிய நிலை உருவாகும். மணமான பெண்களில் சிலர் மகப்பேறு பாக்கியத்தைப் பெற்று மகிழக்கூடும். எதிர்பாராத தனவரவு சிலருக்கு ஏற்படக்கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு. வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்பாராத ஊதிய உயர்வு போன்ற நன்மைகளைப் பெற்று உற்சாகமடைவீர்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்சினை நீங்கும். உறவினர் மற்றூம் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும் | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்
விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் ஐந்து முக மண் அகல் விளக்கு ஒன்று நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து ஏற்றவும்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி | + முதலீடு அதிகரிக்கும் | - உடல்நலம் பாதிக்கும்.
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
No comments:
Post a Comment