Tuesday, December 12, 2023

பல்கலைக்கழகங்களில் வரும் 31ம் தேதிக்குள் மாணவர்கள் குறைதீர்ப்பாளரை நியமிக்காவிட்டால் நடவடிக்கை: யு.ஜி.சி. எச்சரிக்கை

பல்கலைக்கழகங்களில் வரும் 31ம் தேதிக்குள் மாணவர்களுக்கான குறைதீர்க்கும் குழுவையும், குறைதீர்ப்பாளரையும் நியமிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என யு.ஜி.சி. எச்சரித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் மாணவ-மாணவிகளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும், தங்களுக்கான பிரச்னைகளை எடுத்து சொல்வதற்கு ஏதுவாகவும் குறைதீர்க்கும் குழுவையும், குறைதீர்ப்பாளரையும் நியமிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல முறை சம்பந்தப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சில பல்கலைக்கழகங்கள் குறைதீர்ப்பாளர்களை நியமிக்கவில்லை என பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு வந்த புகாரின் அடிப்படையில், கண்டிப்பாக வருகிற 31ம் தேதிக்குள் குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மானிஷ் ஆர்.ஜோஷி, மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளில் உள்ளபடி மாணவர்களுக்கான குறைதீர்க்கும் குழுவையும்(எஸ்.ஜி.ஆர்.சி.), குறைதீர்ப்பாளரையும் நியமிக்க வேண்டும். இருப்பினும் சில பல்கலைக்கழகங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. இந்த விவகாரம் தீவிரமாக பார்க்கப்படுகிறது. எனவே வருகிற 31ம் தேதிக்குள் குறைதீர்ப்பாளர்களை பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்காத பல்கலைக்கழகங்களின் பெயர்களை பல்கலைக்கழக மானியக்குழு இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னரும் நியமிக்காமல் இருந்தால், அத்தகைய பல்கலைக்கழகங்கள் மீது ஒழுங்குமுறை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News