Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 5, 2024

இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரை பொடி வீட்டிலேயே செய்வது எப்படி.?


முருங்கையானது அதன் அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக ஒரு சூப்பர்ஃபுட் எனக் கருதப்படுகிறது. வைட்டமின்கள், கால்சியம், இரும்பு மற்றும் முக்கியமான அமினோ அமிலங்கள் முருங்கையில் ஏராளமாக காணப்படுகின்றன.

இது நம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், எலும்புகளை பலப்படுத்தும் மற்றும் கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

குறிப்பாக உடல் எடையை குறைக்க தீவிரமான உடற்பயிற்சி அது, இது என்று என்னவெல்லாமோ முயற்சித்து பார்த்த மக்களுக்கு அதன் மூலம் பலன் கிடைக்கவில்லை என்றால் கட்டாயமாக முருங்கை கீரை சாப்பிடலாம். ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு என முருங்கை மூலமாக கிடைக்கின்ற பலன்கள் ஏராளம்.

முருங்கைக் கீரையை அடிக்கடி நாம் சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண் நோய், கபம், மந்தம் போன்றவை அனைத்தும் குணமாகும். மேலும் உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது முருங்கைக் கீரையை சாப்பிட்டு வர வேண்டும். இப்படி பல மருத்துவ பண்புகளை கொண்ட முருங்கைக்கீரையை வீட்டிலேயே எப்படி பொடி செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக்கீரை - ஒரு கட்டு

வேர்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

மல்லி - 2 டீஸ்பூன்

புளி - சிறிதளவு

கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10

கருப்பு எள் - ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


செய்முறை :

முருங்கை கீரையின் காம்புகளை நீக்கி அதன் இலைகளை சுத்தமாக ஆய்ந்த பிறகு அவற்றை தண்ணீர் கொண்டு நன்றாக அலசி தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்

பின்பு காட்டன் துணி ஒன்றை எடுத்து அதன் மேல் இந்த கழுவி வைத்துள்ள முருங்கை இலையை பரப்பி நன்றாக தண்ணீர் இல்லாமல் உலர வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்

அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்

இவை அனைத்தும் லேசாக சிவந்த பிறகு அவற்றுடன் சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய், கருப்பு எள் போன்றவற்றையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்

இவை அனைத்தும் நன்றாக சிவந்த பிறகு அதில் பெருங்காயத்தையும், புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்

பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் உலர வைத்துள்ள முருங்கைக் கீரையை சேர்க்க வேண்டும்

இப்போது முருங்கைக் கீரை நன்றாக சுருள ஆரம்பித்து பாதி அளவு வந்தவுடன் அதை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்

இவை அனைத்தும் நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் நாம் வறுத்து வைத்திருக்கும் அணைத்து பருப்பு வகைகளையும் சேர்த்து கொரகொரவென்று அறைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அதோடு வறுத்து வைத்துள்ள முருங்கைக்கீரையும் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியானது இட்லி பொடி பதத்திற்கு இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் சுவையான இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை பொடி தயார்.

தயார் செய்த இந்த முருங்கைக் கீரை பொடியை காற்றுப்புகாத ஜாரில் மாற்றி வைத்துக்கொள்ளலாம்.

இந்த பொடியை நீங்கள் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம் அல்லது சாப்பாட்டில் நல்லெண்ணையை ஊற்றி இந்த பொடியை கலந்து முருங்கைக்கீரை சாதமாக உண்ணலாம்.

No comments:

Post a Comment