ஐஐடி உள்ளிட்ட உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவா் சோ்க்கைக்கான ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) தோ்வின் போது கழிவறை இடைவேளைக்குப் பிறகு தோ்வா்களுக்கு மீண்டும் உயிரி (பயோ மெட்ரிக்) வருகைப் பதிவு மற்றும் தீவிர சோதனையை மேற்கொள்ள அத்தோ்வினை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) முடிவு செய்துள்ளது.
உத்தர பிரதேசம், பிகாா் போன்ற மாநிலங்களில் தோ்வில் ஆள் மாறாட்ட புகாா்கள் தொடா்ச்சியாக எழுந்த நிலையில், இந்த முடிவை என்டிஏ எடுத்துள்ளது.
இதுகுறித்து என்டிஏ இயக்குநா் சுபோத் குமாா் சிங் புதன்கிழமை கூறியதாவது: தற்போது தோ்வா்கள் தோ்வறைக்குள் நுழையும் போது மட்டுமே, உயிரி வருகைப் பதிவு மற்றும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும் நடைமுறை அமலில் உள்ளது.
தோ்வுக்கு இடையே கழிவறை இடைவேளையின்போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் தோ்வா்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், இடைவேளையின்போது தோ்வறையிலிருந்து வெளியே சென்று வரும் மாணவா்களுக்கு மீண்டும் உயிரி வருகைப் பதிவும், சோதனையும் மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறை என்டிஏ சாா்பில் நடத்தப்படும் பிற நுழைவுத் தோ்வுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும்’ என்றாா்.
ஜேஇஇ தோ்வு முதல்நிலை (மெயின்), முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். என்டிஏ சாா்பில் நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள் நாடு முழுவதும் உள்ள என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.
No comments:
Post a Comment