Friday, February 23, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.2024



திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:363

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.

விளக்கம்:

எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.


பழமொழி :

No rains ; No grains

மாரியல்லாது காரியமில்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். --ஆஸ்கார் வைல்ட்

பொது அறிவு : 

1. நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி எது?

விடை: பற்களிலுள்ள எனாமல்

2. X கதிர்களின் மின்னூட்டம்?

விடை: ஓரலகு எதிர் மின்னூட்டம்

English words & meanings :

gaudy - showy , stately ஆடம்பரமான    gallant - courageous துணிச்சலான

ஆரோக்ய வாழ்வு : 

கானாவாழை: சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய குழிப்புண்களை ஆற்றுவதற்கு, இந்த கானாவாழையை அரைத்து பற்று போட்டாலே நல்ல பலன் கிடைக்கும்.. அதேபோல, நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு முதுகிலும், இடுப்பு மற்றும் கழுத்து பகுதிகளிலும் படுக்கை புண்கள் ஏற்படும்.. இந்த புண்களை ஆற்றக்கூடிய சக்தி, குளிர்ச்சி நிறைந்த கானாவாழைக்கு உண்டு.

பிப்ரவரி 23

சீகன் பால்க் அவர்களின் நினைவுநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது

நீதிக்கதை

 அதியமான் வழங்கிய நெல்லிக்கனி

தகடூர் என்ற ஊரை அதியமான் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய அரச சபைக்கு அறிஞர் ஒருவர் வந்தார். அவரிடம், நீண்ட நாள் வாழ்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?" என்று அதியமான் கேட்டார்.

"மன்னரே! ஒரே ஒரு வழி உள்ளது. ஆனால் அது மிகவும் கஷ்டமானதாயிற்றே" என்றார் அறிஞர்.

"எவ்வளவு கடினமானதாயினும் சரி, நீங்கள் கூறுங்கள். நான் அவ்வாறு செய்யச் சித்தமாக இருக்கிறேன்" என்று அதியமான் ஆர்வத்துடன் கேட்டார்.

"தகடூரை அடுத்து குதிரை மலை என்ற மலை ஒன்றுள்ளது. அங்கே ஆழங்காண முடியாத பள்ளம் இருக்கிறது. அந்தப் பள்ளத்திலே அபூர்வமான நெல்லி மரம் உள்ளது. அந்த மரத்தில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நெல்லிக்கனி உண்டாகும். அதுவும் ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டுமே உண்டாகும். அதனை உண்டால், நெடுநாள் வாழமுடியும்" என்றார் அறிஞர்.

"மிக்க நன்றி, நான் குதிரை மலைக்குச் சென்று பார்க்கிறேன்" என்று உரைத்த அதியமான் மறுதினமே குதிரை மலைக்குப் பயணமானார். ஓங்கி உயர்ந்த குதிரை மலையை அடைந்தார். அதன் உச்சிவரை ஏறி, பள்ளம் எங்கே இருக்கிற தென்று சுற்றுமுற்றும் பார்த்தார். மலையின் மறுபுறம் ஆழ்ந்த பள்ளம் இருப்பதைக் கண்டார். அறிஞர் கூறிய பள்ளம் இதுதான் என்று எண்ணி, பள்ளத்தை நோக்கி மெதுவாக நடந்தார். சிறிது கால் பிசகினாலும் கீழே விழுந்து விடும் அபாயத்தை அறிந்து அடிமேல் அடிவைத்துச் சென்றார்.

பள்ளத்தை நோக்கிய போது நெல்லி மரம் ஒன்று இருப்பதைக் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி கொண்ட அதியமான், மரத்தில் கனி ஏதேனும் இருக்கிறதா என்று தேடினார். தேடியபோது ஒரே ஒரு கனி தெரிந்ததும் அதியமானின் மகிழ்ச்சி அதிகரித்தது. மிகுந்த ஆர்வமுடன் மரத்திலிருந்து கனியைப் பறித்தார். அக்கனியை

பத்திரமாக எடுத்துக் கொண்டு, பள்ளத்தைக் கடந்து மலைமீது ஏறி, தகடூர் வந்தடைந்தார். மறுநாள் நெல்லிக் கனியை உண்ணலாம் என்று நினைத் திருந்தார்.

மறுநாள் காலையில் ஒளவையார் அதியமானைக் காண வந்தார். இருவரும் நெடுநேரம் பேசி மகிழ்ந்தார்கள். அதியமான், குதிரை மலையிலிருந்து கொண்டு வந்த நெல்லிக்கனியை ஔவையாருக்கு அளித்து உண்ணுமாறு உபசரித்தான் .

ஒளவையாரும் கனியை உண்டார், "மன்னா, இக்கனியின் சுவை மிகவும் நன்றாக உள்ளதே. இது எங்கு கிடைக்கிறது?" என்று கேட்டார். ஒளவையார் கனியை உண்டபின்பு, அதைப்பற்றிய விபரங்களை மன்னர் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு ஔவையார் மனம் நெகிழ்ந்தார்.

"வலம்படு வாய்வாள் என்று தொடங்கி சாதல் நீங்க எமக் கீந்தனையே” என்று பாடி, அதியமானை வாழ்த்தினார்.

"மன்னனாகிய நான் நெடுநாள் வாழ்வதை விடவும் தங்களைப் போன்ற மண்ணுலகினருக்கு நல்லறிவுரைகள் அளிப்பவரல்லவா நெடு நாள் வாழ வேண்டும்" என்றார் மன்னர்.

அதியமானின் புகழ் அவருடைய வள்ளன்மையால் பன்மடங்கு அதிகமாகியது.

இன்றைய செய்திகள்

23.02.2024

*மருந்துகளின் பெயர்களை பெரிய ஆங்கில எழுத்துக்களில் தான் எழுத வேண்டும்- அரசு அதிரடி.

*சென்னை, கோவையில் உச்சம் தொட்டது: நெற்களஞ்சியமான டெல்டாவில் அரிசி விலை கடும் உயர்வு.

*கலைஞர் நினைவிட திறப்பு விழா: எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்க மு க ஸ்டாலின் அழைப்பு.

*6 முதல் 12 ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்.

*80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

*ஐபிஎல் அட்டவணை வெளியீடு: சென்னையில் முதல் போட்டி தொடங்க இருக்கிறது.

Today's Headlines

* Names of medicines should be written in capital (English) letters only - Government Ordered.

 * Rice Price reached Peak in Chennai and Coimbatore due to the sharp rise  in the Rice prices rice-rich Delta.

 *Artist's Memorial Inauguration: CM invites Opposition MLAs to participate.

 *MoU to set up boarding school for students studying from 6th to 12th standard.

 *Minister Anbil Mahesh announced that 80,000 teachers will be provided with portable computers.

 *IPL schedule release: First match to begin in Chennai.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News