Join THAMIZHKADAL WhatsApp Groups
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 6,244 காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான அறிவிக்கை தமிழக அரசு பணி தேர்வாணையம் மூலம் வெளியாகியுள்ளது.
இந்த குரூப் 4 போட்டித் தேர்வை எழுத விரும்பும் இளைஞர்கள் தன்னார்வ பயிலும் வட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு (30.01.2024) வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் (District Employment And Career Guidance Centres) சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment