Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 5, 2024

போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிப்பதில்லை - அமைச்சர் உறுதி


சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அரசாணை 243 வெளியிட்டதற்கான நன்றி அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ், போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் அரசாணை-243 வெளியிட்டதற்கான நன்றி அறிவிப்பு மாநாடு இன்று(பிப.4) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது.

அதனைத்தாெடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "கலைஞரின் நூற்றாண்டில் நடக்கும் முதல் நன்றி அறிவிப்பு மாநாடாக பார்க்கிறேன்.

எல்லோருக்கும் இருக்கும் ஆசைதான். ஏதாவது ஒரு மேடையிலாவது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் பங்கேற்கமாட்டோமா என்ற ஏக்கம் எனக்குமிருந்தது. அவர் இல்லை என்று சொன்னாலும், இந்த மாநாட்டில் அவரும் கலந்துக் கொண்டு உரையாற்றி இருக்கிறார் என்ற பெருமை இருக்கிறது.

உங்களின் கோரிக்கையை நிறைவேற்றியப் போது நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உரையாற்றும் போது, இரண்டு வார்த்தைகள் கூறியுள்ளார். கோரிக்கையில் அழுத்தம் இருந்தது, நியாயம் இருந்தது என்பதை மிக அழகாக கூறியுள்ளார்.

நீங்கள் ஒவ்வொருவரும் பள்ளிக்கல்வித்துறை என்னும் குடும்பத்தில் உறுப்பினர்களாக உள்ளீர்கள். அரசாணையை ஏற்று கொள்பவர்கள் இருக்கும் போது அதை எதிர்ப்பவரகளும் இருக்க தான் செய்வார்கள்.

ஆசிரியர்கள் தனது பேச்சின் மூலம் ஆங்காங்கே குத்திக் கொண்டுதான் உள்ளனர், அதில் மாற்றமில்லை. ஜனநாயக முறையில் ஒரு அரசாணை வரும் போது அதனை விமர்சிக்கும் உரிமை உண்டு. இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையூறு கொடுப்பவர்கள் நாங்கள் இல்லை.

பட்டதாரி ஆசிரியர்கள் பட்டுப்போக வேண்டும் என்று எண்ணுபவர்கள் நாங்கள் இல்லை. தயவு செய்து இந்த அரசாணையின் நோக்கத்தை திசைதிருப்பக் கூடாது. ஆதரிப்பவர்கள் கூறிய திருத்தங்களையும் எதிர்ப்பவர்கள் கூறும் கோரிக்கைகளிலும், கருத்துகளிலும் எதை சரி செய்ய வேண்டுமோ அதை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர், தலைமை ஆசிரியர் என பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வெளியில் இருந்து குரல் கொடுத்துக் கொண்டு இருப்பவர்களும் வருத்தப்பட வேண்டாம். உங்கள் கோரிக்கைகளை எங்களிடம் கூறுங்கள் உட்கார்ந்து பேசுவோம். என்னுடைய வீட்டின் வாசல் ஆசிரியர்களுக்கு என்றுமே திறந்து இருக்கும். ஒரு ஆர்ப்பாட்டம் , போராட்டம் என வரும் போது அதிகாரிகள் எப்படி பேசுவார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

ஆனால் இன்று வரையும் அதை அனுமதிக்காதவன் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி. போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஒரு ஆசிரியரால் தான் நான் இன்று நின்று கொண்டு இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமை பட்டுள்ளேன். சரியாக செய்வது தான் சமூக நீதி என்பதால் இந்த அரசாணை ஒரு தரப்பு மட்டுமே உயர வேண்டும், மற்றொரு தரப்பு இடைநிலை ஆசிரியராக இருக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாக இருக்கும்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அனைத்து ஆசிரியர்களும் என்னை பாராட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்காதா?. சங்கத்தின் உறுப்பினர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளை முதலமைச்சர், நிதியமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதை எனது கடமையாக கொண்டுள்ளேன். வருகை தந்த ஆசிரியர்கள் மட்டும் எனது சொந்த பந்தங்கள் அல்ல. வெளியில் உள்ள நீங்களும் எனது சொந்த பந்தங்கள் தான்.

ஒரு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் வரும் போது ஒருவர் மட்டும் பதவி உயர்வு பெறும் போது , மற்றொருவர் பதவி உயர்வு இல்லாமல் இருப்பது எந்த அளவு சமூக நீதியாக இருக்கும் என கேள்வி எழுப்பினார். நாங்கள் எப்படி பெண்களுக்கு எதிரான அரசாணையை கொண்டு வருவோம். தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஆசிரியர் எவ்வளவு முக்கியம் என்பது தெரியாதா? ஆசிரியர்களுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ, அதனை செய்ய நான் தயாராக உள்ளேன். ஆசிரியர்கள் நேரடியாக வாருங்கள், நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment