Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 13, 2024

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாமல் அரசு ஏமாற்றுகிறது - CPS ஒழிப்பு இயக்கம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய இடையூறு இல்லாத நிலையிலும் தமிழக அரசு ஏமாற்றி வருகிறது,'' என, மதுரையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கூறினார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஓய்வுக்குப் பின் உத்தரவாதம் இல்லாத இத்திட்டத்தை ரத்து செய்ய கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகஇருந்தபோது ஆட்சிக்கு வந்தால் சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ரத்து செய்யவில்லை.

இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகா மாநிலங்களில் இத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம்அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவது அந்தந்த மாநிலத்தின் விருப்ப அடிப்படையில் என்று இருந்தும்கூட தமிழக அரசு ரத்து செய்ய மறுக்கிறது.

ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல், சத்தீஸ்கர், சிக்கிம் உட்பட பல மாநிலங்கள் 20 ஆண்டுகளாக ஊழியர்களிடம் பிடித்த பணத்தை மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தி விட்டது. அவற்றை திரும்ப பெறாத நிலையிலும்கூட அவை பழைய திட்டத்தை அமல்படுத்தி விட்டன.

ஆனால் ரூ.70 ஆயிரம் கோடி வரை பிடித்தம் செய்த தமிழக அரசு, அதனை மத்திய ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தவில்லை. இச்சூழலில் புதிய திட்டத்தை ரத்து செய்ய சட்டப்பிரச்னை உள்ளிட்ட இடையூறு இல்லாத நிலையிலும் தமிழக அரசு ஏமாற்றி வருகிறது.

புதிய திட்டத்தை ரத்து செய்யவில்லையெனில் பிப்., 16 அன்று சென்னை ஆழ்வார்பேட்டை முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம். காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதுடன், லோக்சபா தேர்தலில் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News