Friday, March 1, 2024

TNPSC வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு

சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து கடந்த கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் இந்த பணிக்காக விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்தது.

மொத்தம் இந்த தேர்விற்காக 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர், வேலுார், விழுப்புரம் ஆகிய 9 இடங்களில், சிவில் நீதிபதி முதல் நிலை தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு கடந்த நவம்பரில் நடந்து முடிந்தது. இதன் பின்னர் முதன்மை எழுத்து தேர்வானது (மெயின் தேர்வு) கடந்த தாண்டு நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் நடந்தது. இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டனர். இதற்கான முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனை தொடந்து, கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியானவர்களின் 245 பேர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த நிலையில், 245 சிவில் நீதிபதிகளுக்கான புரவைசனல் பட்டியலை ரத்து செய்ய கோரி ஷீலா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில், பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்பாமல் இட ஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News