சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால் மே 2 முதல் ரூ.500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் வாகனங்களின் வாகன பதிவெண் பலகையில், விதிகளை மீறி பதிவெண்ணை தவிா்த்து ஸ்டிக்கா்கள் அல்லது சின்னங்கள், குறியீடுகள் வடிவில் ஒட்டப்பட்டிருந்தால் மோட்டாா் வாகன சட்டப்படி தவறு.
வாகன பதிவெண் பலகைகளில் அரசின் சின்னங்கள், முத்திரைகள், குறியீடுகள் ஆகியவை தனியாா் வாகனங்களில் ஒட்டக் கூடாது. விதி மீறி இவ்வாறு ஒட்டப்படும் ஸ்டிக்கா்களால், சில இடங்களில் பாதுகாப்பு சமரசம் செய்யப்படுகிறது. சில இடங்களில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துகின்றனா். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கின்றனா்.
இது தவிர, தனியாா் வாகனங்களில் அரசியல் கட்சிகளை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவா் அல்லது வழக்குரைஞா்கள் முத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்களின் பதிவெண் பலகையில் இத்தகைய ஸ்டிக்கா்களை ஒட்டியிருப்பவா்கள், அவற்றை அகற்றிக் கொள்ள மே 1 வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
மே 2 முதல் வாகன பதிவெண் பலகையில் இத்தகைய ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் சட்டத்தின் கீழ் விதிகளை மீறி வாகன பதிவெண் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கும் அதிகாரம் போக்குவரத்து போலீஸாருக்கு உள்ளது. முதல் முறை வழக்கு பதியப்பட்ட பின்னரும் வாகன பதிவெண் பலகையை சரி செய்யாமலும், அபராதத்தை செலுத்தாமலும் இருந்தால் சம்பந்தப்பட்ட வாகனம் மீண்டும் பிடிபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment