Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 11, 2024

"ஓட்டு கேட்க வந்தீங்களா?" - அரசுப்பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலாவில், அட்டி என்ற பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் என 10க்கும் மேற்பட்டோர், மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அப்போது அதே பகுதியில், திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தபப்ட்ட பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள பெண் ஒருவரின் கணவர் அதிமுக கட்சியின் நிர்வாகி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணை கண்ட திமுக நிர்வாகிகள் சிலர், “அதிமுகவிற்கு ஆதரவாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்” எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அடிதடி வரை சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வன் என்பவரை திமுக நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும் பள்ளி மேலாண்மை குழுவைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களுக்கு திமுக நிர்வாகிகள் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த ஆசிரியர் தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார், இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி மேலாண்மை குழு பெண் உறுப்பினர்களை மிரட்டிய, திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து தேவாலா காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News