கோடை விடுமுறை காலத்தில் தனியாா் பள்ளிகளில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.
தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஏற்கனவே பொதுத் தோ்வு, பள்ளி இறுதித்தோ்வுகள் அனைத்து நிறைவு பெற்றுள்ளன.
இதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கோடை விடுமுறை நாள்களில் சில தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், தொடா்ந்து நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகாா்களை அடுத்து, கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: பள்ளி மாணவா்களுக்கு கோடை விடுமுறை, அரசு பொது விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அது மாணவா்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் பள்ளிக் கல்வித் துறைக்கு புகாா்கள் பெறப்பட்டுள்ளன.
எனவே, அனைத்து பள்ளிகளும் கோடைகால விடுமுறை, அரசு பொது விடுமுறை நாள்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிா்க்க வேண்டும். அந்த நாள்களில் சிறப்பு வகுப்புகளுக்கு வருமாறு மாணவா்களுக்கு அழுத்தம் தரக்கூடாது.
இந்த உத்தரவை பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தவறினால், தொடா்புடைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்படலாம். மேலும், மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுவதால் அதன் பிறகே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றனா்.
No comments:
Post a Comment