Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 25, 2024

கோடை வெப்பத்தைத் தணிக்கும் அருமருந்து வெள்ளரிக்காய்!

கோடை வெயிலுக்கு இதம் தரும் வெள்ளரிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டாலே அற்புதப் பலன் கிடைக்கும். கோடைக் காலத்தில் இயற்கை நமக்குக் கொடுத்த அருமருந்து வெள்ளரிக்காய்.

கோடையில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் மனிதர்களின் உடலில் நீரேற்றம் குறைந்து ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். இதை சரிசெய்வதற்காகவே இருக்கும் இயற்கையின் ஒரு அற்புத படைப்புதான் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளதால், இது கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காயில் வைட்டமின் A, C, பொட்டாசியம், மெக்னீசியம், புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், சர்க்கரை, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்துள்ள காய். இது எளிதில் ஜீரணிக்கக் கூடியது. மேலும், செரிமான அமைப்பை சீராக வைத்திருக்கச் செய்கிறது. வெள்ளரி சாறு இரைப்பை மற்றும் குடல் புண்கள், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்துள்ள காய் என்பதால், உடலின் உள்புற விஷத்தன்மை வாய்ந்த நச்சுப் பொருட்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. பலதரப்பட்ட ஆக்ஸிஜனேற்றிகள், தாவர ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ள இதனை உள்கொள்ளுவதால், உடல் ஆரோக்கியமானது மேம்படுகிறது. வைட்டமின்கள், தாதுக்கள், அத்தியாவசிய ஊட்டச் சத்துகள், குறைந்த கலோரி, குறைந்த கொழுப்பு சத்தைக் கொண்டது. இதில் வைட்டமின் 'கே' எனும் உயிர்ச்சத்து அதிக அளவில் அடங்கியுள்ளது. குக்கர்பிட்டே சின் 'இ' எனும் எதிர்ஆக்ஸிகரணிகள் அதில் அதிகம் உள்ளதால், ஆழ்ந்த உறக்கத்தை இரவில் ஏற்படுத்துகிறது.

வைட்டமின் சி , பிற ஊட்டச்சத்துகள் அதில் நிறைய உள்ளதால், உள்புற அழற்சியைப் போக்கி, உடல் வலி நிவாரணியாகவும் செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. அழற்சி எதிர்ப்பை உருவாக்கும், 'குவ்ய்செட்டின்' அதிலுள்ளதால் மூளையை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

இரவில் இதைச் சாப்பிடுவதால், உடலில் நீர்ச்சத்தானது பாதுகாக்கப்படுகிறது. அதிலுள்ள நீர்ச்சத்தால் சரும ஆரோக்கியம் மேம்படுகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை அமைதிப்படுத்தச் செய்கிறது. உறக்கத்தை மேம்படுத்தி உடல், மன ஓய்வுக்கான நிலையை ஏற்படுத்தித் தருகிறது. உடற்சூடு சீரான நிலையில் இருக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதயம் சார்ந்த இரத்தக் குழாய்களின் உபாதைகளைத் தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் சர்க்கரை உபாதை ஏற்படாமல் பாதுகாக்கிறது. சிறுநீர் சார்ந்த எந்த உபாதையையும் இது குணப்படுத்துகிறது.

மார்பகம், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் லிக்னான்ஸ் எனப்படும் பாலிபினால்கள் வெள்ளரிக்காயில் உள்ளன. சிலிகா என்ற அற்புதமான கனிமம் வெள்ளரிக்காயில் உள்ளதால், இது நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும். மேலும், அதிலுள்ள சல்பரும், சிலிகாவும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும். அது மட்டுமின்றி, தசை இணைப்புகளை திடமாக்கி, மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கிறது. வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் உடலின் தசை நார்கள், குருத்தெலும்பு, தசை நாண்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.

ஹோலிடோசிஸ் பிரச்னைகளை குணப்படுத்த வெள்ளரிக்காய் சிறந்த உணவு. வெள்ளரிக்காயை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகும். இது பாக்டீரியாவிலிருந்து விடுபட உதவுகிறது. வெள்ளரிக்காய் தாகத்தை தணிக்க உதவும். உடலில் எரிச்சலை உணரும் போது மருந்தாக வெள்ளரிக்காய் அளிக்கப்படுகிறது. சிறுநீர் பாதை எரிச்சல், சிறுநீரகக் கல் போன்றவற்றுக்கு வெள்ளரிக்காய் விதைகள் அதிக நன்மை அளிக்கிறது.

தயிரோடு வெள்ளரி விதைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை கரைக்க உதவுகிறது. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் சிறுநீரகக் கல் உள்ளவர்களுக்கு அரிசி சாதத்துடன் வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கிறது.

தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை தலையின் மீது வைப்பதன் மூலம் தூக்கம் வரச் செய்கிறது. வெள்ளரிக்காயில் வைட்டமின் பி1, வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் பி7 உள்ளிட்ட பல வைட்டமின்கள் உள்ளன. வைட்டமின் பி பதற்றத்தின் உணர்வுகளை எளிதாக்க உதவுவதோடு, மன அழுத்தத்தினால் தீங்கு விளைவிக்கும் விளைவையும் தடுக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய் சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்றாலும், சில அரிய பக்க விளைவுகளையும் கூடவே கொண்டுள்ளது. அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் கவனமாக இதை சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. காரணம் அதிலுள்ள பொட்டாசியம் சத்து சிலருக்கு சிறுநீரகப் பிரச்னையை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment