எண்ணெய்களுள் விளக்கெண்ணெய் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடிய எண்ணெயாக கருதப்படுகின்றன.
குறிப்பாக விளக்கெண்ணெய் செரிமானம், எடை இழப்பு, தொப்பையை குறைப்பது, கட்டிகளை கரைப்பது என்று பல நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகின்றன. ஆனால் இது எந்த அளவில் உண்மை?
பழங்காலம் முதலாக நம் முன்னோர்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்காகவும், ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் கை வைத்தியங்களில் விளக்கெண்ணெய் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுவும் சில பிரச்சனைகளுக்கு விளக்கெண்ணெயை மக்கள் உட்கொண்டும் வந்தனர். உண்மையில் விளக்கெண்ணெயை குடிக்கலாமா? பாதுகாப்பானதா? விளக்கெண்ணெயைக் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது காண்போம்.
விளக்கெண்ணெய்
எண்ணெய்களுள் விளக்கெண்ணெய் சற்று அடர்த்தியான மற்றும் நறுமணமற்ற எண்ணெய் ஆகும். இந்த விளக்கெண்ணெயை ஆமணக்கு எண்ணெய் என்றும் அழைப்பர். ஏனெனில் ஆமணக்கு செடியின் விதைகளில் இருந்து இந்த எண்ணெய் எடுக்கப்படுகிறது.
சுவாரஸ்யமாக, இந்த எண்ணெய் எகிப்திய சகாப்தத்திற்கு முன் விளக்குகளுக்கான எரிபொருளாக மட்டுமின்றி, அழகு மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. முக்கியமாக கிளியோபாட்ராவின் அழகான தோல் மற்றும் கண்களுக்கு இந்த எண்ணெய் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்போது இந்த விளக்கெண்ணெயினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.
விளக்கெண்ணெயை குடிக்கலாமா?
பழங்காலம் முதலாக விளக்கெண்ணெய் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஒரு மலமிளக்கி பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு இந்த எண்ணெயை சரியான அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம். சரியான அளவில் உட்கொண்டால் மட்டுமே சரியான பலனைப் பெற முடியும்.
அதோடு இந்த எண்ணெயை குறுகிய காலம் பயன்படுத்துவது மட்டுமே பாதுகாப்பானது. அளவுக்கு அதிகமாக மற்றும் நீண்ட காலம் இந்த எண்ணெயை குடித்து வந்தால், அதன் விளைவாக வயிற்று பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். கூடுதலாக இந்த எண்ணெய் சிலருக்கு அழற்சியையும் ஏற்படலாம். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூற்றுப்படி, விளக்கெண்ணெய் மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், அதனால் உடலுக்கு கிடைக்கும் பிற நன்மைகள் குறித்த ஆராய்ச்சி இன்னும் தேவைப்படுகிறது. இருப்பினும், பாரம்பரிய நடைமுறைகளின் படி, குறைவான அளவில் விளக்கெண்ணெயை குடித்து வருவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இப்போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
மலச்சிக்கலுக்கு...
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூற்றுப்படி, விளக்கெண்ணெய் மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. ஏனெனில் இதில் ரிசினோலிக் அமிலம் இருப்பது தான் காரணம். இது குடல் தசைகளை சுருங்கச் செய்து, குடலில் இருந்து மலத்தை வெளியேற்றுகிறது.
குடல் சுத்தம்
பழங்காலத்தில் குடலை சுத்தம் செய்ய விளக்கெண்ணெய் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனெனில் இதில் மலமிளக்கி பண்புகள் அதிகமாக உள்ளன. இவை உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. இருப்பினும், மருத்துவரின் அறிவுரையில்லாமல் உட்கொண்டால், அது வயிற்று பிடிப்புகள் மற்றும் வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும்.
இரைப்பை குடல் அசௌகரியம்
ஆமணக்கு எண்ணெய் இரைப்பை குடல் அசௌகரியம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. ஆனால் அதிகமாக உட்கொண்டால், அதன் விளைவாக குமட்டல், அடிவயிற்று பிடிப்புகள், வாந்தி, வயிற்று உப்புசம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
சருமத்திற்கு நல்லது
விளக்கெண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. அதனால் தான் அழகு சாதனப் பொருட்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த எண்ணெய் அடர்த்தியாக இருப்பதால், மற்ற எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது இன்னும் சிறப்பான பலனை அளிக்கும். ஆனால் சில சமயங்களில் இது சருமத்தில் எரிச்சல் மறும் அரிப்பை ஏற்படுத்தலாம்.
முடியின் வளர்ச்சி
விளக்கெண்ணெயானது வறண்ட ஸ்கால்ப், முடியின் வளர்ச்சி மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. அதுவும் நீங்கள் தலைமுடி உதிர்வை அதிகம் சந்தித்தால் அல்லது தலைமுடி பலவீனமாக இருப்பதை உணர்ந்தால், விளக்கெண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிப்பதன் மூலம், தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, முடியும் நன்கு அடர்த்தியாக வளரும்.
No comments:
Post a Comment