Tuesday, April 2, 2024

எம்.பில் படித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை!

அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில் 2009க்கு முன் எம்.பில் படித்தவர்களையும் தேர்வு எழுதத் தகுதியுள்ளவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்குக் கடந்த மார்ச் 14ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

கடந்த 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம். ரூ.57,700 - 1,82,400 வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்காகத் தேர்வு எழுத விரும்புவோர் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்ணுடன் முதுநிலைப் பட்டமும், ஸ்லெட் அல்லது நெட் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் பி.எச்டி. முடித்திருக்க வேண்டும்.

இதனிடையே எம்.பில் பட்டப்படிப்பினை முடித்தவர்கள் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக 2009ஆம் ஆண்டு வரையில் பணியில் சேர அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் 'எம்.பில்., பட்டப்படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராக சேர முடியாது எனவும், இந்தப் படிப்பினை இனிமேல் பயிற்றுவிக்கக்கூடாது' எனவும் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

தற்போது 4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில் 2009க்கு முன்னர் எம்.பில் முடித்தவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

"ஜூலை 10, 2009 மற்றும் அதற்கு முன் எம்.பில் பட்டம் பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக யுஜிசி அறிவித்திருக்கிறது. இந்தசூழலில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 10,2009க்கு முன் எம்.பில் முடித்தவர்களையும் தேர்வு எழுதத் தகுதியுள்ளவர்களாக அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட வேண்டும்" என்று எம்.பில் பட்டதாரிகள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News