தண்ணீர் பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகளை காணும் போட்டி சென்னை ஐஐடி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதற்கு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காணும் மாணவர்களின் புதுமையான முயற்சிகளை கவுரவிக்கும் வகையில் ஸ்டாக்ஹோம் ஜுனியர் வாட்டர் பிரைஸ் என்ற போட்டி பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச தண்ணீர் நிறுவனம் மற்றும் ஐஐடி நீர் மேலாண்மை மற்றும் கொள்கை வகுக்கும் மையத்துடன் இணைந்து நடத்தப்படும் இப்போட்டியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
அவர்கள் https://sjwpindia.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு தொடர்பான ஆராய்ச்சி கட்டுரையை ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர் குழுவினர் ஆகஸ்ட் 25 முதல் 29-ம் தேதி வரை சுவீடனில் நடைபெறும் ஸ்டாக்ஹோம் ஜுனியர் வாட்டர் பிரைஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள்.
தேசிய அளவில் சிறந்த 25 குழுவினர்களில் முதல் 10 குழுவினருக்கு தேசிய வாட்டர் சாம்பியன் விருது வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த 25 குழுவினர் தங்கள் கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடியில் காட்சிப்படுத்தலாம். அவர்களுக்கு ஐஐடி சார்பில் சிறப்பு பயிற்சியும் சான்றிதழும் அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment