அரசின் அறிவிப்புகள், திட்டங்களை பெற்றோருக்கு பகிர்வதற்காக வாட்ஸ்-அப் வழியாக ஒரு தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எனும் இணையதளத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதற்கேற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளும் எமிஸ் தளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில் நலத் திட்டங்கள் சார்ந்த தகவல்களை பெற்றோருக்கு பகிர்வதற்காக வாட்ஸ்-அப் வழியாக ஒரு தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
வாட்ஸ்-அப் செயலி வாயிலாக ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜூகேஷன்’(department of school education) எனும் புதிய தளம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த புதிய தளத்தில் ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கும் மேலாக தகவல் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த வாட்ஸ்-அப் தளம் பரிசோதனை முயற்சியில் இருக்கிறது. இதற்கு ஏதுவாக எமிஸ் தளத்தில் உள்ள 1.16 கோடி மாணவர்களின் பெற்றோரது தொலைபேசி எண்களில் பயன்பாட்டில் உள்ளவை எத்தனை, அவை அனைத்தும் வாட்ஸ்-அப் உடன் இணைக்கப்பட்டு உள்ளதா என்ற சரிபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதுவரை 5 லட்சம் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மே 25-ம் தேதிக்குள் இந்த பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்து இதர எண்களின் சரிபார்ப்பு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அவை நிறைவு பெற்றதும் இந்த தளம் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்கு தேவையான அனைத்து தகவல்களையும் உடனே கொண்டு சேர்க்க முடியும். மேலும், பள்ளி, வட்டம், மாவட்டம், மாநில, இயக்குநரகம் அளவிலும் இந்த தளம் வழியாக தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். மேலும், இது பெற்றோருக்கும், பள்ளிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை சரிசெய்யும் கருவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment