Monday, May 6, 2024

ஊட்டிக்கு செல்ல நாளை முதல் கட்டுப்பாடு! இன்று முதல் இபாஸ் பெறலாம்! விண்ணப்பிப்பது எப்படி?

நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்ல நாளை முதல் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் இன்று முதல் பொதுமக்கள் இ பாஸ் பெறலாம். காலை 6 மணி முதல் அதற்கான பணிகள் துவங்கின.

தமிழகத்தில் முக்கியமான கோடை வாசஸ்தலமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்டவை உள்ளன. இங்கு ஆண்டுதோறும் கோடையை குளுமையாக்க மக்கள் சென்று வருகிறார்கள்.

கோடை என்றில்லை தொடர் விடுமுறை வந்தாலும் சரி வண்டியை எடுத்துக் கொண்டு ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ செல்கிறார்கள். இதனால் ஊட்டி, கொடைக்கானல் சாலைகளில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. கிடைக்கும் விடுப்பு இதிலேயே முடிந்துவிடும் போல் இருந்தது. இந்த நிலையில்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த கொரோனா காலத்தில் இருந்தது போல் இ பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 7ஆம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இ பாஸ் முறையை கொண்டு வருவதற்கான பணிகளை ஊட்டி, கொடைக்கானல் மாவட்ட நிர்வாகம் எடுத்து வந்தது.

இந்த நிலையில்தான் ஊட்டி செல்ல இ பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை நீலகிரி ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். epass.tnega.org என்ற இணையதளம் வாயிலாக இ பாஸுக்கு இன்று காலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதற்கான பணிகள் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது. எனவே நாளை முதல் இந்த இணையதள முகவரி மூலம் இ பாஸுக்காக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி செல்ல இ பாஸ் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டன. அது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு இ பாஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவாக உள்ளது.

மேலும் இ பாஸுக்கு என்று வழிகாட்டுதல்களை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் டிஎன்ஈஜிஏ-வுடன் இணைந்து ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா, வணிகம், தொழில்துறை சார்ந்து வாகனங்களில் வருபவர்கள் இந்த இ பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இப்படி விண்ணப்பிக்கும் போது ஒரு கியூ ஆர் கோட் ஜெனரேட் ஆகும். அதை ஊட்டியில் சோதனையில் உள்ள அதிகாரிகள் பரிசோதித்து வாகனங்களை அனுமதிப்பர். இந்த இ பாஸ் நடைமுறையை பெறுவது மிகவும் எளிது. எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை ஊட்டியில் இருக்க போகிறீர்கள், எந்த இடத்தில் தங்க போகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். பயணிக்கும் வாகனமும் காரா, பஸ்ஸா, வேனா என்பதையும் வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்ய உள்ளனர்கள் என்பதையும் குறிப்பிட்டால் போதும் இ பாஸ் ஜெனரேட் ஆகிவிடும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும். இந்த இ பாஸ் நடைமுறையில் எடுத்துக் கொள்ளப்படாது. ஒவ்வொரு வாகனங்களுக்கு வரும் இ பாஸ் பதிவு மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களுக்கும் இ பாஸ் வழங்கப்படும். ஊட்டிக்கு வருவோர் இ பாஸை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது.

பஸ்களில் வருவோருக்கு இ பாஸ் தேவையில்லை, அது போல் நீலகிரி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் தேவையில்லை. மேலும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊட்டியில் வசிக்கலாம். அவர்கள் வேறு பதிவெண் கொண்ட வாகனங்களை ஊட்டியில் பயன்படுத்தலாம். இந்த இ பாஸ் நடைமுறை நாளை (மே 7) முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை பின்பற்றப்படும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News