Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 5, 2024

பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் ரூ.10.70 லட்சத்தை இழந்த அரசுப்பள்ளி ஆசிரியர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (37, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேலத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் டெலிகிராம் செயலிக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், பகுதி நேர வேலைக்கு தொடர்பு கொள்ளவும் என இணையதள முகவரி அளிக்கப்பட்டுள்ளது. அதில், தொடர்பு கொண்ட கார்த்திக்கிடம் மர்மநபர் பேசியுள்ளார். அவர், பகுதி நேர வேலையாக உணவு பொருட்கள் குறித்து லைக் மற்றும் விமர்சனம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே குறிப்பிட்ட வெப்சைட்டில் சென்று கார்த்திக், உணவு பொருட்களுக்கு லைக் கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு குறைந்த அளவு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர், இணையத்தில் ஆன்லைனில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கார்த்திக்கிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய கார்த்திக், 8 தவணைகளில் ரூ.10,70,240 செலுத்தியுள்ளார். அதை பெற்ற மர்மநபர்கள், இன்னும் 5.33 லட்சம் செலுத்த கேட்டுள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியர் கார்த்திக், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இப்புகார் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். 

அதில், ஆன்லைன் மூலம் ஆசிரியர் கார்த்திக்கிடம் ரூ.10.70 லட்சம் மோசடி செய்திருப்பதை உறுதி செய்தனர். அவரிடம் இருந்து பெறப்பட்ட பணம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 7 வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், அந்த வங்கி கணக்குகளை முடக்கி வைக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து, ஆன்லைன் மோசடி என வழக்குப்பதிந்து, வட மாநில கும்பலை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News