Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 9, 2024

மதிய உணவுக்குப் பிறகு 20 நிமிடங்கள் இந்த "பீரியட்" தான்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடவேளைகள்!

அரசு பள்ளிகளில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறார் இதழ் வாசித்தல், புத்தகம் வாசித்தலுக்கு தனி பாடவேளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 10) திறக்கப்பட உள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட வேண்டிய இனிப்பு பொங்கலை, பள்ளி தொடங்கப்படும் முதல் நாளான நாளை அனைத்து பள்ளிகளிலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே வரும் கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. இதில், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம், மனநலப் பயிற்சிக்கான அட்டவணை, ஆசிரியர்களுக்கு ஆண்டு முழுவதும் வழங்கப்பட உள்ள பயிற்சிகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் உட்பட முழுமையான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாதிரி பாடவேளைகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதனைப் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

9 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள், இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சி ஆகியவற்றிற்கு தனியாக பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த, மதிய உணவு இவைவேளைக்குப் பிறகு 1 மணி முதல் 1.20 வரை 20 நிமிடங்கள், சிறார் இதழ்கள் வாசித்தல் மற்றும் புத்தக வாசிப்புக்கு தனியாக பாடவேளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலை, கைவண்ணம், இசை, வாய்ப்பாட்டு உள்ளிட்ட தனித்திறன்களை வளர்த்தெடுக்கவும் பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் இந்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்பட இருக்கின்றன.

நீதி போதனை வகுப்பு உள்பட மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 16 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும், மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தெடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் 10 ஆம் தேதியான நாளையே பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம் மற்றும் புவியியல் வரைபடம் ஆகியவை வழங்கப்படவுள்ளன.


மேலும், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நாட்காட்டியின்படி, மொத்தம் 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாகும். அரசு விடுமுறை, வார விடுமுறை, தேர்வு விடுமுறை என ஆண்டு முழுவதும் மொத்தம் 145 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. வழக்கமாக 210 நாட்கள் பள்ளிகள் இயங்கும். ஆனால் இந்த முறை கூடுதலாக 10 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும். அதன்பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.

அதன்பின் அரையாண்டு மற்றும் 2 ஆம் பருவத்தேர்வு டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் 24-ல் தொடங்கி ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 முதல் 17-ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படும். பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 27 ஆம் தேதியுடன் நிறைவு பெறும். அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்காட்டியில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, செய்முறைத் தேர்வு தொடர்பான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கான விரிவான தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நாட்காட்டி குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment