சப்ஜா விதைகள் என்பது துளசி இலையின் விதை தான். இதை ஆங்கிலத்தில் பேசில் விதைகள் என்று கூறுவார்கள். பொதுவாகவே துளசி மற்றும் திருநீற்றுப்பச்சிலை இரண்டுமே பேசில் வகையை சேர்ந்தது ஆகும்.
துளசி இலையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் போலவே இந்த சப்ஜா விதைகளிலும் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அந்த வரிசையில் சப்ஜா விதைகள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஜீரணம்:
இந்த சப்ஜா விதையில் நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இதனால் உங்கள் உணவு செரிமானம் சீராகி ஜீரண ஆற்றல் மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. நம் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் உள்ளிட்ட குடல் பிரச்சனைகளை குறைக்க சப்ஜா விதைகள் உதவுகிறது.
எடை குறையும்:
தினசரி காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் சப்ஜா விதைகளை சேர்த்து குடித்து வந்தால் நாளடைவில் விரைவாக உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. இந்த சப்ஜா விதையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் இதை சாப்பிடும் போது உடனடியாக வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். மேலும் அடிக்கடி பசி எடுக்காமல் இருக்கும். இதனால் நீங்கள் சாப்பிடும் கலோரிகள் குறைக்க முடியும். உடல் எடையை குறைத்து கொழுப்புகள் சேருவதை தடுக்க இந்த சப்ஜா விதைகள் பெரிதும் உதவுகிறது. அந்த வரிசையில் உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சப்ஜா விதைகள் சிறந்த உணவு.
நீரேற்றம்:
கோடைகாலத்தில் நம் உடலை நீரேற்றுடன் வைத்துக்கொள்ள இந்த சப்ஜா விதைகளை தண்ணீரில் அல்லது ஏதேனும் பழ ஜூஸ்களில் சேர்த்து குடித்து வரலாம். ஒரு சிலர் வீட்டில் செய்யும் சர்பத்தில் இந்த சப்ஜா விதைகளை சேர்த்து குடிப்பார்கள். நம் உடலில் ஏற்படும் பல வகையான பிரச்சனைகளுக்கு இந்த நீர்சத்துக் குறைபாடு ஒரு முக்கிய காரணம். நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை நாம் குடிப்பது அவசியம். இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க பெரிதும் உதவும். மேலும் நம் உடல் கோடை காலத்தில் வறட்சியடைந்து இருக்கும் போது சப்ஜா விதைகளை சாப்பிட்டு வரலாம். இது உங்கள் உடலின் வெப்பநிலையை சமன் செய்து உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல உங்கள் உடலை நீண்ட நேரம் நீர்சத்துடன் வைத்துக்கொள்ள சப்ஜா விதைகள் உதவும்.
ரத்த சர்க்கரை அளவு குறையும்:
நம் உடலில் நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றல் குளுக்கோஸ் ஆக மாற்றும் வேலையை செய்கிறது. அப்படி செய்யும்போது நாம் எடுத்துக் கொள்ளும் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்கி விடுவதால் இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க செய்யும். இந்த நிலை தொடரும்போது தான் அது சர்க்கரை நோயாக மாறுகிறது. சர்க்கரை நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் தாராளமாக இந்த சப்ஜா விதைகளை சாப்பிட்டு வரலாம். குறிப்பாக கார்போஹைட்ரேட் உடல் குளுக்கோஸ் ஆக மாறும்போது உற்பத்தி செய்யப்படும் தேவையற்ற கழிவுகளும் நச்சுகளும் உடனடியாக வெளியேற்ற இந்த சப்ஜா விதைகள் பெரிதும் உதவுகிறது.
No comments:
Post a Comment