தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் தேர்வு வாரியம் மூலம் முழுமையாக நிரப்ப வேண்டும்,' என, இடைநிலை கல்வி முடித்தோர் கலெக்டர்கள் மூலம் அரசுக்கு மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 2013 ல் இருந்து தற்போது வரை இடைநிலை ஆசிரியர் கல்வி பட்டம் பெற்று பல்லாயிரக்கணக்கானோர் ஆசிரியர் பணிக்காக காத்து கிடக்கின்றனர். நடப்பாண்டு அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 6,557 இடைநிலை ஆசிரியர் பணிகளும் நிரப்பப்படும் என அரசு தெரிவித்தது.
ஆனால் ஜூலையில் நடந்த ஆசிரியர் பணி நியமன தேர்வின் போது 2786 ஆசிரியர்கள் மட்டும் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக நடந்த நியமன தேர்வினை மாநில அளவில் 25,000 பேர் எழுதினர். அரசே இந்த ஆண்டில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 6557 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என தெரிவித்தது. ஆனால் நிதிநிலையை காரணமாக கூறி 2786 பணியிடம் மட்டுமே நிரப்பப்படும் என அறிவித்துள்ளது.
இது 2013 ஆண்டு முதல் படிப்பு முடித்து இடைநிலை ஆசிரியர் பணிக்காக காத்திருப்போருக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் பணி நியமன தேர்வு எழுதியும் 2786 இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்கும் பட்சத்தில் 'கட் ஆப்' மதிப்பெண் குறைந்தவர்களுக்கு இடைநிலை ஆசிரியர் பணி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
தமிழக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 6557 இடை நிலை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர் கல்வி படிப்பு முடித்தவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் நேரடியாக மனு அளிக்கும் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
12 ஆண்டுகளாக நிரப்பவில்லை
இடைநிலைக்கல்வி முடித்தோர் கூறியதாவது: அரசு 12 ஆண்டுகளாக அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால் படித்து முடித்த எங்களை போன்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆசிரியர் பணி கிடைக்காமல் உள்ளோம். அரசு இதை கருத்தில் கொண்டு காலியாக உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.
இதுகுறித்த கோரிக்கை மனுவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் அரசுக்கு சமர்பித்து வருகிறோம். இன்று(ஆக., 20) சென்னையில் கல்வித்துறை இயக்குனர், செயலர்களிடம் மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment