அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நிதியை விடுவிப்பதற்கு பதிலாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி (Samagra Shiksha Scheme) ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும். அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்த திட்டத்துக்கு ஒரு ஆண்டுக்கு மொத்த செலவான ரூ.3,586 கோடியை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.
நிதி வழங்கவில்லை: தமிழகத்திற்கு மத்திய அரசு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்காமல் நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பிக்களுடன் சென்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனாலும் மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான முதல் தவணை தொகையான ரூ.573 கோடி என்பது ஒதுக்கீடு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது பெரிய அளவில் விவாதம் ஆகியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு இதுதொடர்பாக நேற்று கடிதம் எழுதினார். இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு செயல்படுத்தாததன் காரணமாகவே நிதி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி: திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழக முதல்வர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளார். அப்போது அவரை வாழ்த்தி வழி அனுப்புவதற்காக வந்த பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்ட முதல் கேள்வியே மத்திய அரசு கல்விக்கான நிதியை தமிழகத்திற்கு வழங்காதது குறித்த கேள்வி தான். இந்த கேள்விக்கான விடையை அளித்துவிட்டு தான் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் முதல்வர்.
கல்விக்கான 573 கோடி ரூபாய் ஜூன் மாதத்திற்குரிய தொகையை இன்னும் மத்திய அரசு கொடுக்கவில்லை. அதனால் தான் ஒரு மாதத்திற்கு முன்பாக தமிழக முதல்வர் அறிவுறுத்தலை ஏற்று நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் திருச்சி எம்.பி துரை வைகோ உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சார்ந்தவர்களை அழைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் சந்தித்து கோரிக்கை வைத்தோம்.
படிப்பு விஷயம்: கல்வி திட்டங்களுக்காக வரவேண்டிய நிதியை நீங்கள் நிறுத்தி விடக்கூடாது. பல லட்சம் பிள்ளைகளுடைய கல்வி சார்ந்த விஷயம். இதில் அரசியல் செய்யக்கூடாது என்று நேரடியாகவே வலியுறுத்தி இருந்தோம். அவர்களும் பார்க்கிறோம், சொல்கிறோம் என்று சொன்னார்கள். அதன் பிறகு அதுபற்றி எதுவுமே சொல்லவில்லை, செய்யவில்லை. இருந்தாலும் துறை சார்பாக பல்வேறு முறை கடிதங்கள் எழுதி இருக்கிறோம். அதற்கும் உரிய பதில்கள் வரவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நாடாளுமன்றத்தில் பேசும்போது இது சம்பந்தமாகவும் பேசி இருக்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இருந்தோம். ஆனால் கூட்டத்தொடர் முடிந்து இத்தனை நாட்கள் கழித்தும் நிதி வரவில்லை. கல்வி என வரும் பொழுது அதற்கான நிதியை நிறுத்தி விடக்கூடாது, அதை உடனடியாக ஒதுக்கிட வேண்டும்.
அழுத்தம் கொடுக்கிறார்கள்: 573 கோடி மட்டுமல்ல கடந்த ஆண்டு நமக்கு வர வேண்டிய கடைசி தவணையான 249 கோடியையும் மத்திய அரசு நிறுத்திவிட்டது. ஆனாலும் இருக்கும் நிதியை வைத்து, தமிழக அரசு சார்பில் சிறப்பாக செயலாற்றி வந்தோம். என்ன செய்தாலும் சிறப்பாகச் செயல்படுகிறார்களே என்று யோசித்து, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கையில் எடுத்துள்ளது.
நீங்கள் தேசிய கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என ஒன்றிய கல்வித்துறை தெரிவிக்கிறது. இன்றைக்கு ஏதோ காரணத்தைச் சொல்லி தேசிய கொள்கையில் வந்தால் தான் தருவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?
தேன்கூட்டில் கை வைக்கும் வேலை: பள்ளிக் கல்வித்துறையில் தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்ற முறையில் மத்திய அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டுமே என்பதையே மறந்து விடுகிறார்கள். கொள்கை என்பது விவாதம் சார்ந்த கொள்கை. அதற்காக நிதியை நிறுத்துவது நியாயம் அல்ல
கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதிச் சுமையில் தமிழக அரசு சமாளித்துக் கொண்டிருக்கிறது. அதேபோன்றுதான் கல்விக்கான நிதிச் சுமையையும் சமாளிக்கப் போகிறோம். கடுமையான நிதிச் சுமைகள் வந்தாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தையும் இந்த அரசும் தமிழக முதலமைச்சரும் செய்வார்கள்.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தச் சொல்வது என்பது தேன்கூட்டில் கை வைப்பது போன்றது. மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது" எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
No comments:
Post a Comment