Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 26, 2024

நம்மிடம் எடுத்து நமக்கே தரும் Inverter UPSஐ ஒத்த, ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)! நல் மாற்றமா? ஏமாற்றமா?

நம்மிடம் எடுத்து நமக்கே தரும் Inverter UPSஐ ஒத்த, ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)! நல் மாற்றமா? ஏமாற்றமா?

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


உச்சநீதிமன்றத்தால் அரசமைப்பின் படியான அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டு 1.1.2004ற்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பொறுத்தவரை ஊழியரிடம் எந்தவித பிடித்தமும் செய்யப்படாது, பணிக்காலத்தில் அவருக்கான கொடுபடா ஊதியமாகக் கருதப்படும் தொகையே ஊழியரின் பணி ஓய்வுத் தேதி முதல் ஓய்வூதியமாகவும், இறப்பிற்குப்பின் குடும்ப ஓய்வூதியமாகவும் வழங்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர், ஊழியரிடம் 10% - அரசு சார்பில் 10% என்று ஓய்வூதியத்திற்காக மாதம் தோறும் பிடித்தம் செய்து அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, ஊழியரது ஓய்வுக்காலத்தைய பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஊழியரது கணக்கில் இருக்கும் தொகையில் (இருந்தால்தான்) 60%ஐ கையில் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 40%ற்கு பத்திரமாக வழங்கும் NPS எனும் New Pension Scheme 2004ல் நாடு முழுமைக்கும் நடைமுறைக்கு வந்தது. இதனைச் செயல்படுத்த காங்., பா.ஜ.க., & திமுக உட்பட பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவோடே PFRDA எனும் தனிச் சட்டமும், அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்த கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியிலிருந்த மேற்குவங்கம், திரிபுரா & கேரளாவில் மட்டும் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திரிபுராவில் பா.ஜ.க-வும் கேரளத்தில் காங்கிரஸும் ஆட்சியமைத்தவுடன் NPS நடைமுறைக்கு வந்தது. இருந்தும் அதன்பின் 2வது முறையாகத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் கேரளத்திலோ இன்றளவும் NPS ஒழிக்கப்படவில்லை. அதேநேரம் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளைத் தொடர்ந்த திரிணாமுல் காங். ஆட்சியில் இன்றளவும் பழைய ஓய்வூதியத் திட்டமே நடைமுறையில் உள்ளது. NPSற்கு எதிரான நிலைப்பாட்டில் ஆதிமுதல் உறுதியாக நிற்கும் கட்சியில் திரிணாமுல் காங்கிரஸும் ஒன்று.


தமிழ்நாட்டில், '10% பிடிப்போம்! ஓய்வூதியம் தரமாட்டோம்!!' என்ற நிலைப்பாட்டை மட்டும் NPSலிருந்து எடுத்துக்கொண்டு, Commutation & Gratuityயை ஒழித்துக்கட்டி நாட்டிலேயே இல்லாத புதுவித ஓய்வூதிய முறையை எந்தவித அரசமைப்புச் சட்டப்பூர்வ அனுமதியுமின்றி முன்தேதியிட்டு CPS எனும் பேரில் நடைமுறைப்படுத்தியது அஇஅதிமுக. அதனைத் தொடர்ந்து வந்த திமுகவும் அதையே தொடர்ந்தது. வெளிச்சமற்ற விடியலாக இன்றும் தொடர்கிறது.

நிலையற்ற பங்குச்சந்தை பேராபத்தில் ஊழியரது பணிக்கால சேமிப்பும் அரசின் பங்களிப்பும் கரைக்கப்பட்டு வருவதை எதிர்த்து நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பா.ஜ.க அல்லாத (காங்., ஆம் ஆத்மி, ஜார்கண்ட் முக்தி மோட்சா) மாநில அரசுகள் இத்திட்டத்திலிருந்து வெளியேறி தமது மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்தத் தொடங்கின.

ஊழியர்களின் எதிர்ப்பையும், மற்ற கட்சிகளின் நிலைப்பாடு மாற்றத்தையும், இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிப்பதையும் உணர்ந்த பா.ஜ.க அரசு NPSஐ மேம்படுத்திட மார்ச் 2023ல் ஒன்றிய நிதித்துறைச் செயலாளர் திரு.டி.வி.சோமநாதன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையான Unified Pension Scheme (UPS)ஐத்தான் 24.08.2024ல் கூடிய மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோதி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஓய்வுற்ற / இறந்த பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களது குடும்பங்கள் எதிர்கொண்ட 'பெருந்துயர் - நெடுந்துயர்' தற்போது பணியிலுள்ள இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கும் தொடராதவாறு ஒரு இளைப்பாறலைத் தந்துள்ளது இந்த UPS எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்.

எதையெல்லாம் ஒருங்கிணைத்துள்ளது? மெய்யாகவே இது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான சரியான மாற்றா? தொடர்ந்து பார்ப்போம். . .

Pension, Family Pension, D.A, Lump Sum Payment எனும் 4 கூறுகளை ஒருங்கிணைத்துள்ளது இந்த UPS.

1. Pension :

* 10 - 24 ஆண்டுகால பணி முடித்து ஓய்வு பெறுவோருக்கு விகிதாச்சார அடிப்படையில் குறைந்தது ரூ.10,000/- முதல் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

* 25 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெறுவோருக்கு, ஓய்வு பெரும் மாதத்திற்கு முன்பான இறுதி 12 மாதங்களில் பெற்ற Basic Payன் சராசரியில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.


உதாரணமாக, ஜூலை increment பெறும் ஒருவரது 2025 டிசம்பர் மாத Basic Pay 42000 எனில்,

= (Jan'25 - June'25) + (Jul'25 - Dec'25)

= ((40800 * 6) + (42000 * 6)) ÷ 12

= (2,44,800 + 2,52,000) ÷ 12

= 4,96,800 ÷ 12

= 41400

இதன் 50% தொகையான ரூ.20,700/- மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.


2. Family Pension :


* ஓய்வூதியர் இறந்துவிட்டால் அவர் இறுதியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

உதாரணமாக, ரூ.20,700/- மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர் இறக்க நேர்ந்தால், இதன் 60% தொகையான ரூ.12,420/- மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

3. Pension & Family Pensionக்கு D.A :

* ஓய்வூதியம் & குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அவ்வப்போதைய நிலவரப்படியான அகவிலைப்படியும் வழங்கப்படும்.

4. Lump Sum Payment :

* ஊழியரது ஓய்வு மாத Basic Pay & D.A தொகையில் 10%ஐ அவர் பணியாற்றிய முழுமையான 6 மாதங்களுக்கு ஒருமுறை என்பதாக மொத்த பணிக்காலத்திற்கான Lump Sum Payment கணக்கிடப்பட்டு தனியாக வழங்கப்படும். (இது தவிர்த்து தற்போது நடைமுறையில் உள்ளது போன்று பணிக்கொடையும் (Gratuity) உண்டு.)

உதாரணமாக, 10 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று ஓய்வு பெறும் ஊழியரது Basic Pay 42000 எனில்,

= (BP + DA) * 10%

= (42000 + 21000) * 10%

= 63000 * 10%

= 6300

இந்த ரூ.6300/-ஐ முழுமையுற்ற ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை என்று அவர் பணிக் காலத்திற்குக் கணக்கிடப்படும்.

அதாவது, 10 ஆண்டுகள் நிறைவுற்றவர் (120 மாதங்கள்) 20 ஆறு மாதங்களை நிறைவு செய்திருப்பார்.

= 6300 * 20

= 1,26,000

இவருக்கு ரூ.1,26,000/- Lump Sum Payment வழங்கப்படும்.

NPSல் இல்லாத மேலே கண்ட இந்த 4 முறைகளையும் ஒருங்கிணைத்த ஓய்வூதிய முறையாக UPS வடிவமைக்கப்பட்டுள்ளது.


சரி. இது இது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான சரியான மாற்றா? அல்லது அதைப் போன்று ஓரளவேனும் பயனுள்ளதா?. . . . பார்ப்போம்.

OPSல் ஓய்வூதியத்திற்கென ஊழியரிடம் எந்தத் தொகையும் பிடிக்கப்படுவதில்லை. NPSல் 100% உறுதியற்ற ஓய்வூதியத்திற்காக 10% பிடிக்கப்படுகிறது. UPSல் ஊழியரிடம் 10% பிடிக்கப்பட்டாலும், 10,000 முதல் Basis Payல் 50% வரையான ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.

அதே நேரம், ஒன்றிய அரசில் OPSற்கான முழு ஓய்வூதியம் பெற 20 ஆண்டுகள் பணிக்காலமாக இருந்தது, UPSல் 25 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை OPSல் பணிக்காலம் குறித்த குறைந்தபட்ச வரையறையின்றி இறந்தவர் பெற்ற இறுதி மாத ஊதியத்தில் 30% என்று இருந்தது. ஆனால், UPSல் 50% Basic Payல் பெறும் Pensionல் 60% என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் குடும்ப ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது. 10 ஆண்டுகளுக்குக் குறைவான காலத்தில் இறப்போர் குறித்த விபரங்கள் இல்லை.

அடுத்துதான் மெயின் மேட்டரே!

அந்த Lump Sum Payment தொடர்பான BP+DAல் 10% என்பது வேறொன்றுமில்லை ஊழியரது NPS தொகை தான். ஆனால் அந்தத் தொகையை முழுமையாகத் தராது, 12ல் ஒரு பங்கு மட்டுமே தரப்படும் என UPS வரையறுக்கிறது.

உதாரணமாக, 10 ஆண்டுகளில் மாதம் 5,000 வீதம் ஊழியரிடம் பிடித்தம் செய்வது,

= 5000 * 12months *10years

= 6,00,000

இதில், அரசின் பங்களிப்பு 18.5% என்கிறது UPS. ஆனால், குறைந்தது 10% என்று வைத்தால்கூட, அதுவும் 6,00,000. ஆகமொத்தம் 12,00,000. கூடுதலாக இதற்குண்டான Dividendம் சேர்த்து ஊழியரின் கணக்கில் இருக்கும். ஆனால், அதிலிருந்து ரூ.1,00,000/- மட்டுமே Lump Sum Paymentஆக வழங்கப்படும் என்கிறது UPS.

அப்படியானால், ஊழியரது மீதி ரூ.11,00,000 + Dividend தொகை எங்கே? அதிலிருந்து தான் ஓய்வூதியமும் குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படப் போகிறது.

அதாவது, ஊழியரது பேரில் பிடித்தம் செய்யப்படும் தொகையிலிருந்து 12ல் ஒரு பகுதியை அதாவது 8.33%ஐ Lump Sum Paymentஆகவும் மீதியுள்ள 91.67%ஐ தானே வைத்துக் கொண்டு அதிலிருந்து மாதாந்திர ஓய்வூதித்தையோ / குடும்ப ஓய்வூதியத்தையோ தருவோம் என்பதே தற்போதுவரை வெளிவந்துள்ள UPS சரத்துக்களின் முழுமையான சாராம்சம்.

Simpleஆ சொல்லனும்னா, Inverter UPS தானாக மின் உற்பத்தி செய்வதில்லை. தனக்கு வரும் மின்சாரத்தைப் பிடித்து வைத்து பின்னர் நமக்கு மின்சாரத்தைத் தரும். அதுபோலத்தான் இந்த UPS திட்டமும். ஆம், ஊழியரது பணத்தைப் பிடித்து வைத்துக் கொண்டு அதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமா ஓய்வூதியமாகத் தரப்படும் என்கிறது இந்த UPS.

மின்சாரமே இல்லாத போது UPS மேன்மையானதுதான். அதுபோல எதுவுமே இல்லாத NPSற்கு நம் பணத்தையாவது திருப்பித்தரும் இந்த UPS சிறப்பானது தானே என்ற எண்ணம் தோன்றலாம்.

மறந்துவிட வேண்டாம். . . . பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது உற்பத்திச் செலவற்ற மின்னுற்பத்தி இயந்திரம் போன்றது. ஆம். Pension என்பது (பணிக்காலத்தில் கொடுபடாது விடப்பட்ட) கொடுபடா ஊதியமே அன்றி, பணிக்காலத்தில் கட்டாயப்படுத்தி பிடிக்கப்படும் ஊதியத்தின் ஒரு பகுதி அல்ல.

பூரண உடல் நலத்தோடே உழைக்கும் ஊழியருக்கு அவரது ஓய்வுக் காலத்திற்கென வழங்கியாக வேண்டிய ஓய்வூதிய உரிமையானது NPSல் பறிக்கப்பட்டு உழைப்பின் ஒரு பகுதியும் சுரண்டப்பட்டது. இந்த UPSல் உழைப்பின் ஒரு பகுதியைச் சுரண்டி அதிலிருந்து பகுதி பகுதியாக மாதம் தோறும் வழங்கப்பட உள்ளது. அதுவும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோருக்கு மட்டுமே.

எதுவுமே இல்லாத இந்நேரத்தில் இதுவாவது கிடைத்துள்ளதே என்று நிம்மதிப் பெருமூச்சு விடலாமே அன்றி. . . இது தான் நமக்கான நிரந்தரத் தீர்வென முடங்கிவிட வேண்டாம்.

நமது நாட்டில் மட்டும் OPS - NPS - CPS என்று பல்வேறு ஓய்வூதிய நடைமுறைகள் உள்ளன. ஆயுளுக்கும் வேலை பார்க்கும் அரசு ஊழியருக்கு இல்லாத பழைய ஓய்வூதியப் பலன்கள், பதவியே ஏற்காவிடினும் தேர்தலில் வெற்றி பெற்றாலே MP / MLAக்களுக்கு வழங்கப்பட்டுவிடுகிறது. கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட கிட்டாத பழைய ஓய்வூதியப் பலன்கள் அவரே உயர்நீதி மன்றத்தில் பணியேற்றதும் கிடைத்துவிடுகிறது.

மேலும், ஒன்றிய அரசின் NPS / UPS நடைமுறைகளுக்கும் தமிழ்நாட்டு ஊழியர்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. நமது மாநில அரசு NPS படியும் செயல்படவில்லை. UPS படி செயல்படப் போகிறதா என்பதும் தெரியவில்லை.

மேலும், UPSஐ முன்னுதாரணமாக வைத்து தமிழ்நாட்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களும் நமது நியாயமான & சட்டப்படியான ஓய்வூதிய உரிமையைச் சுருக்கிக் கொண்டு கடந்துவிடவும் வேண்டாம்; சுருக்கப் பார்ப்போருக்கு வெண்சாமரம் வீச முற்படவும் வேண்டாம்.

சமரச சலனமேற்படுத்தும் பெருமூச்சுகளை நிறுத்திவிட்டு பறிக்கப்பட்ட நமது ஓய்வூதிய உரிமையை முழுமையாக மீட்டெடடுப்பது மட்டுமே நமது உயிர் மூச்சாக இருக்கட்டும்!

நிதி நிலையைக் காரணம் காட்டி அரசு ஊழியர்களை - ஆசிரியர்களை - மாநில பொதுத்துறை ஊழியர்களை மட்டுமே வஞ்சித்துக் கொண்டிருக்கும் விடியலரசிடம் நமது பங்களிப்பு மட்டுமே சுமார் 37,500 கோடி ரூபாய் உள்ளது. இதேயளவான அரசின் பங்களிப்பை அரசே வைத்துக் கொண்டுகூட PFRDAவில் ஒப்பந்தமிடாத நமது மாநிலத்தில் நமக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த இயலும்.

முழுமையான நலனில்லை என்றாலும், பா.ஜ.க முன் வைத்துள்ள UPS எனும் ஓரளவு நலனிற்கான உந்துவிசை என்பது தேசிய அளவில் NPS ஒழிப்பிற்கு எதிராக எழுந்த தனிப்பட்ட பெருமொத்த அழுத்தமே!

தமிழ்நாட்டிலும் பல்வேறு துறைகள் - சங்கங்கள் - கட்சிகள் உள்ளிட்ட பேதங்களைக் கடந்து - ஒன்றிணைந்து, 100% தொழிலாளர் நலச் சிந்தையோடே CPSஐ ஒழித்து OPSஐ மீட்டெடுப்போம் என்ற ஒற்றை முழக்கத்தோடே பெருவாரியான அரசு ஊழியர்களும் - ஆசிரியர்களும் - பொதுத்துறை ஊழியர்களும் களம் கண்டால் மட்டுமே நமக்கான விடியல் வெளுக்கும்.

ஆம். 20 ஆண்டுகாலத்தில் 35,000ற்கும் மேற்பட்ட CPS இறப்புகளின் பெருந்துயரும் - நெடுந்துயரும் நம்மையும் நமக்குப் பின்வரும் ஊழியர்களையும் பீடிக்கவிடாது தடுத்திட, கோடிக்கைகள் ஒன்றிணைந்து கோரிக்கைதனை வென்றெடுப்போம்!

No comments:

Post a Comment