Tuesday, September 10, 2024

இனி வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்துக்களை பதிவு செய்யலாம்!


நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், சொத்து விற்பது தொடர்பான பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் திருப்பி அனுப்புவது வழக்கம்.

இதில், நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், சொத்து விற்பனையை நிறுத்தக்கூடாது என, சில வழக்குகளில் தீர்ப்பு வந்து உள்ளது.

எனவே, தடை ஆணை இல்லாத நிலையில், வழக்கு நிலுவையில் இருந்தாலும், சொத்து விற்பனையை பதிவு செய்யலாம் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பத்திரங்களை திருப்பி அனுப்புவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பதிவுத்துறையின் இந்த உத்தரவு, சொத்து வாங்குவோர், அதற்கு கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: சொத்து வாங்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் பாதிப்பு ஏற்படும்.

அதாவது, உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த சொத்தை, ஒருவர் வேறு நபருக்கு விற்கும் நிலையில், உரிமையாளர் வழக்கு தொடர்கிறார் எனில், அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், மோசடி செய்தவர் சொத்தை எளிதில் விற்று விட முடியும்.

இது போன்ற வழக்கில், அசல் உரிமையாளருக்கு சாதகமாக கோர்ட் தீர்ப்பு வரும் நிலையில், மோசடி நபரை நம்பி சொத்து வாங்கியவர், அதற்கு வீட்டுக்கடன் கொடுத்த வங்கிகளுக்கு இழப்பு ஏற்படும்.

எனவே, இந்த விஷயத்தை மேலோட்டமாக பார்த்து, பதிவுத்துறை ஒரு முடிவுக்கு வருவது நல்லதல்ல. சட்ட வல்லுனர்களை ஆலோசித்து, இதில் உரிய தெளிவுரைகளை பதிவுத்துறை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News