தொடக்கப் பள்ளிகளில் அலுவல் பணிகளை மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டஅரசு தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், கற்பித்தல் பணியுடன் எமிஸ்தளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில். எமிஸ் தளத்தின்செயல்பாடுகள் கடும் பணிச்சுமையாக இருப்பதாகவும், மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிகளில் மாணவர் வருகைப் பதிவு தொடங்கி அனைத்து செயல்பாடுகளும் ‘எமிஸ்’ தளம் வாயிலாகவே நடத்தப்படுகிறது. எமிஸ் தளத்தில் மாணவர்களின் சுயவிவரங்கள், கல்வித் தொகை சார்ந்த தகவல்கள், 3 பருவ மதிப்பெண்கள் பதிவேற்றப்படுகின்றன. மேலும், பள்ளிகளில்நடத்தப்படும் கலைத் திருவிழா நிகழ்ச்சி விவரங்களும், வெற்றியாளர்கள் விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இதேபோல், மாணவர்களின் செல்போன் எண், ரத்த வகை, ஆதார்விவரங்களும் பதிவு செய்தாக வேண்டும். உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்களும் எமிஸ் தளம் வாயிலாகவே தரப்படுகிறது. இவ்வாறு பல்வேறு பணிகள் எமிஸ் தளம் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தொடக்கப் பள்ளிகளில் இதற்கான கணினி மற்றும் பிரின்டிங் வசதிகள் இல்லை.
இதுதவிர 1980 - 90-களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு கணினி சார்ந்த பயிற்சி போதுமான அளவு வழங்கப்படவில்லை. பல பள்ளிகளில் ஈராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த சூழலில்தான் எமிஸ் தளத்தில் தொடக்கக்கல்வி சார்ந்த புள்ளி விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஆசிரியர்கள் கடும் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்ற தேவையான பணியாளர்களை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதேநேரத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் எமிஸ் உட்பட அலுவல் பணிகளை கண்காணிக்க தனியாக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நடுநிலைப் பள்ளிகளிலும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment