Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 5, 2024

காலாண்டு விடுமுறை முடிந்து அக்.7-ல் பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்


தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை முடிவடைந்து வரும் திங்கட்கிழமை 7-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளின் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுமுறைக்கு பிறகு, வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் விவரம்; பள்ளிகளில் வகுப்பறைகள் உட்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும். அதேபோன்று இரண்டாம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாட நூல்களும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

மேலும், பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி அந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர இரண்டாம் பருவத்துக்கான கற்றல் - கற்பித்தல் செயல் திட்டங்கள், கலைத் திருவிழா போட்டிகளுக்கான நடைமுறைகள் ஆகிய பணிகளையும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment