
தமிழக அரசு பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை புதிய BS-VI பேருந்துகளிலும் விரிவுபடுத்தியுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

இலவச பேருந்து பயண திட்டம்
தமிழக அரசு சார்பாக மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையான மகளிர் உரிமை தொகை மற்றும் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் போன்ற அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
அதன் படி நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் வேலைக்கு செல்லும் பெண்கள் மாதம் குறைந்தது 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை சேமிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. .

புதிய பேருந்துகளை அறிமுகம் செய்த தமிழக அரசு
இந்த திட்டத்தின் மூலம் மாதம் மாதம் போக்குவரத்து செலவில் ஒரு தொகை சேமிக்கப்படுகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், சாதாரண பேருந்துகளில் மட்டுமே பயணிக்கும் நிலை உள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு புதிதாக வாங்கியுள்ள BS-VI பேருந்துகளிலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2022-23 மற்றும் 2023-24 ஆம் வருடத்திற்கான அறிவிப்பின்படி 2,000 புதிய பேருந்துகளில் இதுவரை 1.905 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதேபோல் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,500 பேருந்துகளில் கூண்டு முழுவதும் புதுப்பிக்க ஆணை வழங்கப்பட்டு. அதில் 1.262 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

பயன்பாட்டிற்கு வந்த பேருந்துகள்
மேலும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KFW) நிதி உதவியுடன் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டு வரும் 228 தாழ்தள பேருந்துகளுடன், கூடுதலாக 41 புதிய தாழ்தள பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பெண்களும் , திருநங்கைகளும் பயணிக்கலாம்
2024-25 ஆம் வருடத்திற்கான அறிவிப்பின்படி 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே மற்ற போக்குவரத்து கழகங்களில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகளையும் சேர்த்து 242 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்கண்ட BS-VI சாதாரண பேருந்துகள் "விடியல் பயணத் திட்டத்தில்" இயக்கப்படுவதால் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment