Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 20, 2024

தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு முடிவுகளை துரிதமாக வெளியிட திட்டம்



கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் 2022-ம் ஆண்டு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு எனும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வு தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 885 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

இதுசார்ந்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், விடைத்தாள் திருத்துதல் பணிகளை துரிதமாக முடித்து முடிவுகளை விரைந்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னதாக சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment