பண்டிகை முன்பணம் பெற அரசு ஊழியர்கள் 'களஞ்சியம்' செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கருவூல மற்றும் கணக்குத்துறை சார்பில் அனைத்து சம்பள கணக்குத்துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனிடையே அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது. அதே போல் அரசு ஊழியர்கள் எடுக்கும் விடுப்புகள், சம்பள விவரங்கள் மற்றும் ஊழியர்களின் பணி அறிக்கைகள் ஆகியவற்றையும் டிஜிட்டல் முறையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதற்காக கருவூலம் மற்றும் கணக்குகள் துறை சார்பாக "களஞ்சியம்" என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பண்டிகை கால முன்பணம் பெறுவதற்கு அரசு ஊழியர்கள் " களஞ்சியம்" செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கருவூல மற்றும் கணக்குத்துறை சார்பில் அனைத்து சம்பள கணக்குத்துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "அனைத்து பணியாளர்களும் தங்களது பண்டிகை முன்பணத்தினை களஞ்சியம் செல்போன் செயலி மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் அனைத்து பணவரைவு அலுவலர்களும் தங்களது அலுவலகத்தின் அனைத்து பணியாளர்களையும் பண்டிகை முன்பணத்தினை பெற களஞ்சியம் செயலி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் களஞ்சியம்' என்ற செயலி மூலம் தான் தீபாவளி பண்டிகைக்கு முன் பணம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் முதன்மை நிதித்துறை செயலாளருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொ) சா. டானியல் ஜெயசிங், பொதுச்செயலாளர் ஆ. செல்வம் ஆகியோர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறுகையில், "கருவூல ஆணையர் நடத்திய காணொளி கூட்டத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் இனிமேல் 'களஞ்சியம்' என்ற செயலி மூலம் தான் தீபாவளி பண்டிகைக்கு முன் பணம் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் 2024 செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகே விண்ணப்பிக்க வேண்டும் என கருவூலத்துறை ஆணையர் மூலம் மாநில முழுவதும் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறான சுற்றறிக்கையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏனென்றால் தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு மாத காலம் இருக்கக்கூடிய நிலையில் 'களஞ்சியம்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை, சாத்தியம் இல்லாத அவசரகதியில் உடன் அமல்படுத்த முடியாத உத்தரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கருதுகிறது.
பொதுவாக தமிழ்நாட்டில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அலுவலக உதவியாளர் முதல் உயர் அதிகாரி வரை பணிபுரிகின்றனர். ஆனால் அத்தனை பேரும் ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பார்களா, அப்படியே வைத்திருந்தாலும் எல்லோரும் 'களஞ்சியம்' செயலியை பயன்படுத்த தெரிந்தவர்களாக இருப்பார்களா, என்றால் கேள்விக்குறியாக உள்ளது. அது மட்டுமல்ல. பல நேரங்களில் தொழில்நுட்ப குறைபாடுகளால் செயலிழந்த செயலியாக 'களஞ்சியம்' செயலி இருக்கிறது.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கருவூலத்துறையில் அதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதிய பயிற்சி இல்லை. அதனை உடன் ஏற்படுத்திட வேண்டும். அது மட்டுமல்லாமல், கருவூலத்துறையில் 1500-க்கும் மேற்பட்ட இள நிலை உதவியாளர் பணி காலியிடங்கள் உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் 78-க்கும் மேற்பட்ட புதிய தாலுகாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு சார்நிலைக் கருவூலம் புதிதாக உருவாகவில்லை. அதனால் கருவூலத்துறை ஊழியர்கள் மிகப் பெரிய பணிச்சுமையோடு பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். களஞ்சியம் செயலியை முழுமை யாக அனைவராலும் பயன்படுத்த தெரியாத நிலையில் உடனடி உத்தரவால் பலன் ஏதும் ஏற்படாது.
எனவே, பண்டிகை முன்பணத்திற்கு களஞ்சியம் செயலி மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தாமல் ஊழியர் நலன் கருதி தற்போதைய ஆணையாளரின் உத்தரவை ரத்து செய்து பழைய முறையில் அனுமதித்திட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment