Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 13, 2024

ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு குற்றப் பின்னணியை ஏன் விசாரிக்கக் கூடாது? - ஐகோர்ட் கேள்வி

வழக்கறிஞர்கள், காவல் துறையினர் போல ஆசிரியர்களுக்கும் அவர்களின் பணி நியமனத்துக்கு முன்பாக அவர்களது குற்றப் பின்னணி குறித்து ஏன் விசாரிக்கக் கூடாது என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதன்பிறகு நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர். நீலகண்டன் ஆஜராகியிருந்தார். அப்போது ஆசிரியர்களுக்கு எதிரான பல்வேறு குற்ற வழக்குகள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆசிரியர்களின் பணி நியமனத்தின் போதே அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் ஆராயக்கூடாது என்றும், இது தொடர்பாக தமிழக அரசு ஏன் ஒரு முடிவை எடுக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞரான ஆர். நீலகண்டன், அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் அவர்களிடம் கேட்கப்படுவதாக விளக்கமளித்தார்.

அதற்கு நீதிபதிகள், ஒரு வழக்கறிஞர் பார் கவுன்சிலில் பதிவு செய்யும் முன்பாக அவரது குற்றப்பின்னணி குறித்து போலீஸார் மூலமாக விசாரிக்கப்படுகிறது. அதேபோல காவல்துறையில் பணிக்கு சேருபவர்களின் குற்றப் பின்னணியும் ஆராயப்படுகிறது. அப்படியிருக்கும்போது எதிர்கால தலைமுறைகளை நல்வழிப்படுத்தி, அவர்களின் வாழ்க்கைக்கு அச்சாணியாக திகழும் ஆசிரியர்களின் குற்றப்பின்னணி குறித்து ஏன் போலீஸார் மூலமாக அவர்களது பணி நியமனத்துக்கு முன்பாகவே ஆராயக் கூடாது என்றும், இது தொடர்பாக தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.26-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News