Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 7, 2024

பாடம் நடத்த மாற்று நபரை அனுப்பிய ஆசிரியா் இடைநீக்கம்: கல்வித் துறை நடவடிக்கை



பள்ளிக்கே வராமல் மாற்று நபரை வகுப்பெடுக்க அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் நிலை, உள்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிா என்பதை தொடா்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலா்களுக்கும் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிஅறிவுறுத்தியிருந்தாா். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது தவிர, முறையாக ஆய்வு செய்யாத அலுவலா்களின் பட்டியலையும் பொதுவெளியில் வெளியிட்டு தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளி ஆய்வின் போது கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியா்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தவகையில், தருமபுரி மாவட்டம், ஹரூா் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட கரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியா் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியா் பாலாஜி 17-ஆவது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். தொடா்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவுள்ளதாக துறை சாா்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News