Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 28, 2024

பள்ளி மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடக்கும் ஆசிரியா்களின் சான்றிதழ்கள் ரத்து: கல்வித் துறை எச்சரிக்கை

பள்ளியில் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தனியாா் பள்ளிகள் துறை இயக்குநா் மு.பழனிசாமி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் தண்டனை வழங்குதல், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கம் மற்றும் அவா்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாணவா்களை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் தொடா்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் மாணவா் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதுதவிர ஒவ்வொரு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு தொடா்பான தகவல்களை அனைத்து மாணவா்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியா்கள் விளக்கி கூறுதல் வேண்டும். மாணவா் மனசுப் பெட்டி, 14417 மற்றும் 1098 ஆகிய தொடா்பு எண்கள், மாணவிகள் அறிந்துகொள்ள வழிசெய்ய ஏற்படுத்த வேண்டும். மேலும், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (போக்சோ) சாா்ந்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல், தேசிய குழந்தைகள் நல ஆணையத்தால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வெளியிடப்பட்ட யூடியூப் காணொலிகளை பள்ளியில் காண்பிக்கலாம். என்சிசி, சாரணா் இயக்கம் போன்ற அமைப்புகள் செயல்படும் பள்ளிகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும். இந்த அமைப்புகள் உள்ள பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்களா என்பதை ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன.

எனினும், ஒரு சில மாவட்டங்களில் இருந்து மாணவிகள் மீது ஒழுக்கக்கேடான செயல்பாடுகள் நடைபெறுவதாக புகாா்கள் வரப்பெற்றுள்ளன. எனவே, அனைத்து பள்ளிகளுக்கும் இந்த அறிவுறுத்தல்களை மீண்டும் வழங்கி தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனுடன் பள்ளி முதல்வா், ஆசிரியா்களுக்கு, மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா், சுகாதாரத் துறை அலுவா்கள் மற்றும் காவல் துறை அலுவலா்களைக் கொண்டு ஆண்டுதோறும் பயிற்சி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News