Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 20, 2025

அங்கீகாரம் புதுப்பிக்க பொறியியல் கல்லூரிகளுக்கு பிப்.2 வரை அவகாசம் நீட்டிப்பு


பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் புதிய படிப்புகளுக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்ரவரி 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கட்டுப்பாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஐசிடிஇ வெளியிடுகிறது. அவற்றை முறையாக பின்பற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொடர் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதியை ஏஐசிடிஇ வழங்கும். இதுதவிர, கல்லூரிகள் தங்களுக்கான அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

அதன்படி, பொறியியல் கல்லூரிகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் கடந்த நவம்பரில் தொடங்கப்பட்டன. இதையடுத்து, அங்கீகாரம் நீட்டிப்பு, திறந்தநிலை, இணையவழி படிப்புக்கான அனுமதி, புதிய கல்லூரிகள் மற்றும் படிப்புகள் தொடங்க விரும்பும் உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க ஏஐசிடிஇ அழைப்பு விடுத்தது. மண்டல வாரியாக கல்லூரிகள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் கடந்த ஜனவரி 13-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இந்த அவகாசம் பிப்ரவரி 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை www.aicte-india.org என்ற இணையதளத்தில் அறியலாம் என்று ஏஐசிடிஇ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment