Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 24-ம் தேதி தொடக்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குருப்-4 பணிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 24 முதல் மார்ச் 5-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு அழைக்கப்பட்ட பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து தகவல் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியாக தபாலில் அனுப்பப்படாது.
இளநிலை உதவியாளர் மற்றும் பிற பதவிகளை தேர்வுசெய்த தேர்வர்கள், தட்டச்சர் பதவிக்கான அழைப்பாணை பெறப்பட்டிருந்தாலும் அவர்கள் இப்பதவிக்கான கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ள தவறினால் அத்தகைய தேர்வர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment