Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 21, 2025

புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழகம் ரூ.5000 கோடியை இழக்கிறது! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்


பாஜக ஆளாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளதால், தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும் என்று கடிதம் மூலம் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கல்வி நிதி நிலுவை ரூ.2152 கோடியை வழங்க உத்தரவிடக் கோரி பிரதமருக்கு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும் முதல்வர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அனுப்பிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் கோரிய ரூ.2152 கோடி கல்வி நிதி குறித்து தனது கடிதத்தில் எந்த பதிலையும் ஒன்றிய கல்வி அமைச்சர் பிரதான் கூறவில்லை. முதலமைச்சரின் கோரிக்கைக்கு நேரடியாக பதில் அளிக்காமல், மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், “சமக்ர சிக்ஷா அபியான் திட்டமும் பிஎம்ஸ்ரீ திட்டமும் புதிய கல்விக்கொள்கையின் ஒரு அங்கமே. பாஜக ஆளாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளதால், தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். 1968 முதல் மும்மொழி கொள்கைதான் இந்திய கல்வித் திட்டத்தின் முதுகெலும்பு. மும்மொழி கொள்கையை இதுவரை முறையாக அமல்படுத்தாதது துரதிருஷ்டவசமானது. இதனால் காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது.

தமிழ்நாடு சமூக, கல்வி திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறது. அனைவருக்கும் கல்வியை உறுதிப்படுத்தியது தமிழ்நாடுதான். விளிம்பு நிலை மக்களுக்கும் நவீன கல்வி என்பதை உறுதிசெய்ததும் தமிழ்நாடுதான். கல்வியை அரசியலாக்க வேண்டாம்; அரசியல் வேறுபாடுகளைக் கடந்த மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டும்.

தமிழ் மொழி, கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்ற கேள்வியே கிடையாது. தமிழ்நாடு பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மறுப்பதால் 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்கிறது. மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த உறுதியாக உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment