Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக அமைக்கப்படும் குழுக்களில் அரசியல் தலையீட்டை தடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு புகார் பெட்டி காட்சி பொருளாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் 13 வயதுள்ள மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
சில மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் 11 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐஜி.பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழுவை அரசு அமைத்து விசாரணைக்கு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், தற்போது, கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவியை, அப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள், கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக அமைக்கப்படும் கண்காணிப்புக் குழு, மாணவர் மனசு புகார் பெட்டி, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக இருப்பதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு செயல்படுகிறது. இந்த குழுக்களில் நிர்வாகிகளை நியமிக்க, பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை இக்குழுக்களில் நியமிக்க வேண்டும். ஆனால், இவ்விதிகளைப் பின்பற்றாமல், ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இப்பதவியை கவுரவப்பதவியாக நினைக்கும் அரசியல் கட்சியினர், மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை காட்டுவதில்லை.
பள்ளி மற்றும் மாணவர்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், மாணவ, மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகள் வெளியில் தெரியாமல் போய்விடுகிறது. இதேபோல, பள்ளிகளைக் கண்காணிக்க அமைக்கப்படும் கண்காணிப்புக் குழுக்கள் மாணவிகளின் நலனில் போதிய அக்கறை காட்டுவதில்லை. மேலும், சில பள்ளிகளில் மாணவர் மனசு புகார் பெட்டிகள் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதில், பெறப்படும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
இதனால், மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. போக்சோ சட்டத்தில் தண்டனைகள் கடுமையாக்க வேண்டும். இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவிகளின் நலன் காக்க அரசு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்த்து, கண்காணிக்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்படும்போது உரிய தீர்வுக்கு வழிகாட்டுதல் வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment