Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 16, 2025

CBSE - 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆங்கில பாட வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து



சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதில் 10-ம் வகுப்பு ஆங்கில பாட வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறினர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ், நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

முதல் நாளில் பத்தாம் வகுப்புக்கு ஆங்கிலம் பாடத்துக்கும், 12-ம் வகுப்புக்கு தொழில் முனைவோர் பாடத்துக்கும் தேர்வுகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு மையத்தில் பலத்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. செல்போன் உட்பட மின்னணுப் பொருட்கள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், மாணவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே தேர்வறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதில் 10-ம் வகுப்பு ஆங்கில பாட வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். தொடர்ந்து இந்தாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் மார்ச் 18-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 4-ம் தேதி வரையும் நடத்தப்பட உள்ளன.

இந்த தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வை எழுத இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment