Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகம் முழுவதும் இன்று நடந்த பிளஸ் 2 ஆங்கிலப் பாடத் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். கிராமப்புற மாணவர்களும் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் ‘ஈசி’யாக இருந்ததால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை (மார்ச் 3) பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசுப்பொதுத்தேர்வு தொடங்கியது. அதனையொட்டி இன்று பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் படித்த, மிகவும் எதிர்பார்த்த கேள்விகள் வந்ததால் அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், பாடல், இலக்கணப் பகுதி, இடம் சுட்டி பொருள் விளக்கம் ஆகிய பகுதியிலிருந்து கேள்வி எளிமையாகவே கேட்கப்பட்டிருந்தது. அதேபோல் அனைத்து பிரிவு வினாக்களும் எளிதாக இருந்ததால் மாணவர்கள் உற்சாகத்துடன் ஆங்கிலப் பாடத்தேர்வை எழுதியுள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து மேலூர் அருகே அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆங்கில ஆசிரியர் கீதமீனபிரியா கூறுகையில், "ஒரு மதிப்பெண் வினா ரொம்ப ‘ஈசி’யாக இருந்தது. கிரியேட்டிவ் ரைட்டிங், டயலாக் ரைட்டிங், ஸ்லோகன் ரைட்டிங் பகுதியிலிருந்தும் கேள்விகள் எளிதாகவே இருந்தன. சம்மரி ரைட்டிங், லெட்டர் ரைட்டிங்கில் வேவ்ஸ் பர்னிச்சர் நிறுவனத்திற்கு மாணவர்கள் எழுதும் கடிதம் குறித்த கேள்வி பல தேர்வுகளில் கேட்கப்பட்டது என்பதால் மாணவர்களுக்கு எளிதாக இருந்தது. அனைத்து பகுதியிலிருந்தும் கேள்விகள் எளிதாகவே இருந்தது.
46-வது கேள்வியில் இலக்கணம், எர்ரர் கரெக்ஷன் பகுதியில் அடிக்கடி கேட்காத பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருந்தது. இருந்தாலும் மாணவர்கள் புரிந்து எழுதும் வகையில் இருந்தது. இதில் கேட்கப்பட்ட ‘பாராகிராப்’ அனைத்துமே மிக எளிமையானது. மாணவர்கள் நன்றாக படித்த "A nice cup of tea", prose பகுதியிலும், "All the world's a stage" poetry பகுதியிலும், "life of Pi" Non-detailயிலும் கேட்கப்பட்டிருந்தது.
கடந்தாண்டு கேள்வித்தாளை விட இந்தாண்டு எளிதாகவே இருந்தது. சாதாரணமாக மெல்ல கற்கும் மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்வித்தாள் எளிதாக இருந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் 90-க்கு 90 மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு உள்ளது" என்றார்.
இதுகுறித்து மாணவி மு.தான்யா கூறுகையில், "ஒரு மதிப்பெண் வினா மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினா 20-ல் 5 எதிர்பார்க்காத வினாக்கள் கேட்டிருந்தனர். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் விடை எழுதலாம். பெரும்பாலும் மாணவர்கள் ‘புக் பேக்’கில் இருந்து கேள்விகள் வந்தது. ‘லெட்டர் ரைட்டிங், பாராகிராப்’ ஆகியவை ‘புக் பேக்’கில் இருந்தே கேட்கப்பட்டிருந்தது" என்றார்.
மாணவி தக்ஷிணாம்பிகா கூறுகையில், "ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. அடிக்கடி படித்த எதிர்பார்த்த கேள்விகள் வந்திருந்தன. 90-க்கு 90 மதிப்பெண் எடுக்கும் வகையில் வினாத்தாள் எளிதாகவே இருந்தது" என்றார்.
கிராமப்புற மாணவர் சி.தேவபிரகாஷ் கூறுகையில், "ஒரு மதிப்பெண் வினாவில் 20-ல் 10 எளிதாக இருந்தது, 10 வினாக்கள் கஷ்டமாக இருந்தது. இந்த வினாக்கள் ‘புக் பேக்’கில் இருந்து கேட்காமல் புத்தகத்தின் உள்ளிலிருந்து கேட்டதால் கொஞ்சம் சிரமமாக இருந்தன. மற்ற பகுதி வினாக்கள் எளிதாகவே இருந்தது. எங்களைப்போன்ற கிராமப்புற மாணவர்களும் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் வினாத்தாள் எளிதாக இருந்தது. தமிழ்ப்பாடத் தேர்வு போல் ஆங்கிலப் பாடத்தேர்வு மிகவும் ‘ஈசி’ யாக இருந்தது" என்றார்.
No comments:
Post a Comment