Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 29, 2025

மாற்றுத் திறனாளி மாணவர்களின் கற்றல் அடைவு நிலை என்ன? - ஆய்வுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: “நடப்பு கல்வியாண்டின் (2024-25) முடிவில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இறுதி மதிப்பீடு (Endline Survey) தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் மூலமாக நடத்த வேண்டும்.

அதன்மூலம் இந்த மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து அவர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்து பயிற்சி நூல்களை வரும் கல்வியாண்டில் (2025-26) அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி இறுதி மதிப்பீட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பாடவாரியான கேள்விகள் மற்றும் மாணவர்களின் பதில்களை குறிப்பதற்கான படிவங்களையே பயன்படுத்த வேண்டும்.

அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை அறிவதற்கான ஆய்வை முறையாக மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அனைத்து சிறப்பு பயிற்றுநர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி இந்த ஆய்வு குறித்த நேரத்தில் நடைபெறுவதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மாணவர்களுக்கு கடந்த 2 கல்வியாண்டுகளில் அடிப்படை ஆய்வு, நடுநிலை மதிப்பீடு ஆகியவை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதி மதிப்பீடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment