Join THAMIZHKADAL WhatsApp Groups

அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்படும் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தகவலியல் ஆகிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பி.டெக். படிப்பில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் புதிய நடைமுறையை சென்னை ஐஐடி வரும் 2025-26-ம் கல்வி ஆண்டில் அமல்படுத்த உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு, நுண்கலைகள், கலாச்சாரத்துக்கான சிறப்பு ஒதுக்கீடு ஆகியவைபோல, ஒலிம்பியாட் பிரிவிலும் ஒவ்வொரு படிப்பிலும் தலா 2 இடங்கள் ஒதுக்கப்படும். அதில் ஒரு இடம் பிரத்யேகமாக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கை, ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு முறையின்கீழ் வராது. இதற்கு தனி சேர்க்கை நடத்தப்படும். வரும் 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான பதிவு ஜூன் 3-ம் தேதி தொடங்கும். ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை https://ugadmissions.iitm.ac.in/scope என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment