Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 20, 2025

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் முடிக்க கோரிக்கை


பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, தமிழகம் முழுவதும் ஒரே நாளில் முடிக்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனருக்கு மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக முழுவதும், நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள், அடுத்த வாரம் தொடங்க உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில், விடைத்தாள்கள் திருத்த உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடைத்தாள்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஒரு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் கூடுதல் விடைத்தாள்கள் இருந்தால், அதனை மாவட்டத்தில் உள்ள, வேறு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்திற்கு மாற்றி அனுப்ப வேண்டும். இதற்காக, ஆசிரியர்களை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் மையத்திலிருந்து வேறொரு மையத்திற்கு மாற்றி அனுப்பக்கூடாது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களை அமைக்க கூடாது. தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் நடத்தும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை மட்டுமே, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு வேளைக்கும் கூடுதல் விடைத்தாள்களை திருத்த சொல்வதால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், 2024ல், தமிழகம் முழுதும், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆறு மாதம், ஒரு ஆண்டு வளர் ஊதியம் ரத்து செய்யப்பட்டது.

பல ஆண்டுகளில், மே முதல் வாரம் வரை, சில பாட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். அதனால், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முடிவடையும் வகையில் திட்டமிட்டு, விடைத்தாள்களை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment