Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 24, 2025

யார் இந்த சிவச்சந்திரன்? - ‘நான் முதல்வன்’ பயிற்சியுடன் ஐஏஎஸ் தேர்வில் மாநில முதலிடம்!


ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் சென்னையில் ஆடிட்டர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மனைவி கிருஷ்ணவேணி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள். இவர்களில் மூத்த மகன் சிவச்சந்திரன் (28) சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்து சி.ஏ தேர்விலும் வெற்றி பெற்றார்.

இருப்பினும் காவல் துறையில் பணியாற்றும் விருப்பத்துடன் இந்திய குடிமைப் பணி தேர்வுக்காக சில ஆண்டுகளாக படித்து வந்தார். 4 முறை இந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டபோதும் நடப்பு ஆண்டில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இப்போது வெளியான குடிமைப் பணி தேர்வு முடிவுகளின்படி சிவச்சந்திரன் இந்திய அளவில் 23-வது இடத்திலும், தமிழக அளவில் முதல் இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் உள்ள குலதெய்வமான காளியம்மன் கோயிலுக்கு சிவச்சந்திரன் வந்திருந்தார். அப்போது அவர் கூறும்போது, “இந்திய குடிமைப் பணி தேர்வில் நான் தேர்ச்சி பெற என் பெற்றோர், ‘நான் முதல்வன்’ திட்ட பயிற்சியாளர், நண்பர்கள், நான் படித்த டிஏவி பள்ளி நிர்வாகம் ஆகியோர் தான் காரணம். ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது என் விருப்பம்” என்றார்.

50 மாணவர்கள்... சிவில் சர்வீஸ் பணிகளுக்கு 1,009 பேர் தேர்வாகியுள்ளனர். தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சக்தி துபே முதலிடத்தை பெற்றுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 50 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தர்மபுரியை சேர்ந்த பி.சிவச்சந்திரன் மாநிலஅளவில் முதலிடமும், தேசியளவில் 23-ம் இடத்தையும் பிடித்துள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவராவார்.

அதேபோல், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ என்ற மாணவி மாநில அளவில் 2-ம் இடமும், தேசியளவில் 25-வது இடத்தையும் பிடித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக 180 பேர் ஐஏஎஸ் பதவிக்கும், 37 பேர் ஐஎப்எஸ் பதவிக்கும், 200 பேர் ஐபிஎஸ் பதவிக்கும், 613 பேர் குரூப் ஏ பதவிகளுக்கும், 113 பேர் குரூப் பி பதவிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களில், தேர்ச்சி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் யுபிஎஸ்சி வலைத்தளத்தில் வெளியிடப்படும். இதில் தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு: நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று 134 பேர் நேர்காணல் தேர்வுக்கு சென்றதில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நான் மட்டும் முதல்வன் அல்ல. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக விரும்பி தொடங்கி வைக்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்த திட்டம் வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment