Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 27, 2025

தமிழகத்தில் 11 புதிய அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் திறப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கல்லூரிக்கும் 5 பாடப்பிரிவுகளில் ஓராண்டுக்கு 3050 மாணவர்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9150 மாணவர்கள் பயன்பெறுவர், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 26) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியர்களின் உயர்கல்வித் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு, 2025-26ஆம் ஆண்டுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில், தமிழகத்தில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், கடலூரில் பிப்.21 அன்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர், பண்ருட்டியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ முதல்வர் தொடங்கி வைத்தார்.

இப்புதிய கல்லூரிகள் ஒவ்வொன்றும் தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாம் ஆண்டுக்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 11 கல்லூரிகளுக்கு மொத்தம் 132 ஆசிரியர்கள் மற்றும் 154 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவித்து, 11 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்துக்காக மொத்தம் 25 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரிக்கும் 5 பாடப்பிரிவுகளில் ஓராண்டுக்கு 3050 மாணவர்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9150 மாணவர்கள் பயன்பெறுவர். முதல்வரால் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்ட இப்புதிய 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்த்து, தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கோவி. செழியன், டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News