Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 3, 2025

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை


கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். மேலும், கோடை விடுமுறையை மாணவர்கள் பாதுகாப்பாக கழிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.

இதற்கிடையே சென்னை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சில பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்துவதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தற்போது வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதுடன், தொடர் வகுப்புகள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பெற்றோர்கள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதில், ‘அனைத்து விதமான தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதை மீறி வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரைக்க செய்யப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment