Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 6, 2025

11 மாவட்டங்களில் 11,820 அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் மாற்றியமைப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் 11,820 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிக்கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் காவல்துறையினர், சைபர் குற்றக் காவலர்கள், 2 கல்வியாளர்கள், 2 உளவியலாளர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவும், பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர், நிர்வாகப் பிரதிநிதி, ஆசிரியர் அல்லாத அலுவலரைக் கொண்ட குழுவும் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி அமைத்தபோதிலும் அவை முறையாக இயங்குவதில்லை. எனவே, மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமத்தை மாற்றி அமைத்து, மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிட்டார். பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வைத்துள்ள பாதுகாப்புப் பெட்டிகளில் மாணவர்கள் தங்களின் புகார்களை போடலாம்.

பின்னர் அந்தப் புகார்கள் படிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு வாரமும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 14417 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம். 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம். இதற்கென 60 பயிற்சி பெற்ற நபர்கள் பணியில் உள்ளனர். போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பாக 31,185 பள்ளிகளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களில் 7,25,432 ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர். காவல்துறையின் `அவள்' நிகழ்வு குறித்தும் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. பல்வேறு விவரங்களுடன் "பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கையேடு" தயாரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க மாநில அளவில் பயிற்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, 1,4,747 ஆசிரியர்கள் மூலமாக 16,93,132 மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட விநாடி வினா போட்டிகளில் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

கோவை, தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, தேனி, திருப்பத்தூர், திருப்பூர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 11,820 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாவட்டங்களில் மாற்றி அமைக்க 2 வாரம் அவகாசம் வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், பிற மாவட்டங்களிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுமங்களை விரைவில் மாற்றியமைக்க வேண்டும். விசாரணை ஆக.5-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News